காலிறுதி வாய்ப்பை இழந்தது கொக்குவில் இந்துக் கல்லூரி

188
U19 Schools Cricket 2022

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3, 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், மொறட்டுவ மெதடிஸ்ட் உயர் கல்லூரியை எதிர்கொண்ட, கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>> 115வது வடக்கின் பெரும் சமர் ஒத்திவைப்பு

அதன்படி களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரபாகரன் கீர்த்திபிரியன் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், பாஸ்கரன் பிரவன் மற்றும் ஜெயகுமார் அனோஜன் ஆகியோர் நிதானதமாக ஓட்டங்களை குவித்து இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர்.3

எனினும், அனோஜன் 33 ஓட்டங்களுடனும், பிரவன் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க மத்தியவரிசையில் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுகள் விழத்தொடங்கின. இறுதியாக, அணித்தலைவர் சுவேந்திரன் கஜனன் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் வந்தவேகத்தில் வெளியேறினர். எனவே, 46.5 ஓவர்கள் 172 ஓட்டங்களுக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மெதடிஸ்ட் கல்லூரி அணி கவின் பெர்னாண்டோ, நிம்ஷார சில்வாவின் ஆரம்ப இணைப்பாட்டம் (73 ஓட்டங்கள்) மற்றும் சந்துன் பெர்னாண்டோவின் வேகமான ஓட்டக்குவிப்பின் உதவியுடன் 33.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை உறுதிசெய்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கவின் பெர்னாண்டோ 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சந்துன் பெர்னாண்டோ 27 பந்துகளில் 43 ஓட்டங்களை குவித்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக நிம்ஷர சில்வா 26 ஓட்டங்கள், நவீன் மதுசங்க 23 ஓட்டங்கள் மற்றும் அகில தில்ருக் 20 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சுவேந்திரன் கஜனன் மற்றும் மணிமாறன் கபிஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, இந்த போட்டியில் தோல்வியுற்றதன் காரணமாக கொக்குவில் இந்துக் கல்லூரி அணி தங்களுடைய காலிறுதிப்போட்டிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

கொக்குவில் இந்துக் கல்லூரி -172/10 (46.5), அனோஜன் 33, பிரவன் 28, கஜனன் 27, லக்ஷான் சாமிக்க 25/2, ஷிரான் பெர்னாண்டோ 34/2

மெதடிஸ்ட் உயர் கல்லூரி மொறட்டுவ – 174/4 (33.1), கவின் 47, சந்துன் 43, கஜனன் 27/2, கபிஷன் 51/2

முடிவு – மெதடிஸ்ட் உயர் கல்லூரி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<