ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி 75 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் இலகு வெற்றி பெற்றது.

கடந்த போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய ஜிம்பாப்வே அணி நாணய சுழற்றிசியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. போட்டித் தொடர் முழுவதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ப்ரைன் சாரி மற்றும் சாமு சிபாபா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதுடன் துடுப்பாட்ட வரிசையில் ஏழாவது வீரராக இருந்த பீட்டர் மூர் இம்முறை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அத்துடன் அறிமுக வீரராக தரிசாய் முசக்கண்டா இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் ஐந்து ஓவர்களில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை இழந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பீட்டர் மூர் ஒரு ஓட்டத்துடன் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் சச்சித் பதிரனவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்த அதே நேரம் ஹெமில்டன் மசகட்சா 10 ஓட்டங்களுடன் நுவன் குலசேகரவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

அதன் பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட தரிசாய் முசக்கண்டா மற்றும் கிரேக் எர்வின் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர். எனினும் இவ்விருவரும் ஜெப்ரி வண்டர்சேயின் சுழல் பந்தில் சிக்குண்டு முறையே 36 மற்றும் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

கடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 76 ஓட்டங்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு செல்ல உறுதுணையாக இருந்த சிக்கந்தர் ராசா வெறும் 5 ஓட்டங்களுக்கு சச்சித் பதிரனவின் பந்து வீச்சில் LBW முறையில் துரதிர்ஷ்டமாக ஆட்டமிழந்து சென்றார். சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஜெப்ரி வண்டர்சே மற்றும் அசேல குணரத்ன தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் 3 விக்கெட்டுகளையும் 42 ஓட்டங்களுக்கு இழந்து சிறிது தடுமாற்றம் கண்டது. இன்றைய போட்டிக்காக ஜிம்பாப்வே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட பிரைன் விடோரி முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதனை தொடர்ந்தது களமிறங்கிய அணித் தலைவர் உபுல் தரங்க, குசல் மென்டிசுடன் இணைந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். எனினும் குசல் மென்டிஸ் கிராம் க்ரிமரின் பந்து வீச்சில் சோன் வில்லியம்சிடம் பிடி கொடுத்து துரதிர்ஷ்டமாக 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

Cricketry – One of the most successful tours of Zimbabwe
AFP PHOTO

மிகவும் சிறப்பாகத் துடுப்பாடிய அணித்தலைவர் உபுல் தரங்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினார். இறுதியில் 37.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றியிட்டியது.

போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் போட்டித் தொடரின் ஆட்ட நாயகன் விருதுக்கு குசல் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே அணி: 160(36.3) – தரிசாய் முசக்கண்டா 36(37), சோன் வில்லியம்ஸ் 35(54), கிரேக் எர்வின் 25(33), மால்கம் வாலர் 14(13), அசேல குணரத்ன 10/3(4.3), ஜெப்ரி வண்டர்சேயின் 50/3(10), சசித் பத்திரன 26/2(7), சுரங்க லக்மால் 23/1(6), நுவன் குலசேகர 30/1(7)

இலங்கை அணி: 166/4(37.3) – உபுல் தரங்க 57*(98), குசல் மென்டிஸ் 57(72), அசேல குணரத்ன 16*(25), குசல் பெரேரா 14(13), ப்ரைன் விட்டோரி 52/3(9), கிராம் கிரிமர் 32/1(10)

வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு ThePapare.com சார்பாக வாழ்த்துக்கள்!