அகில தனன்ஜயவின் தடையை நீக்கியது ஐசிசி

1525

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்து வரும் அகில தனன்ஜய மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அனுமதியளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அகில தனன்ஜய தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்திலும் இணைக்கப்பட்டுள்ளார்.   

பந்துவீச்சுப்பாணியை பரிசோதிக்க இந்தியா செல்லும் அகில தனஞ்சய

ஐ.சி.சி. இனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்ட…

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கை தரும் சுழற்பந்து வீச்சாளராக வளம் வந்தவர் அகில தனன்ஜய. எனினும், கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அகில தனன்ஜய ஐசிசியின் விதிமுறைக்கு முரணாக பந்து வீசுவதாக நடுவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை ஆராய்ந்த சர்வதேச கிரிக்கெட் வாரியம், அகில தனன்ஜயவை 14 நாட்களுக்குள் பந்து வீச்சு பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது.

அதற்கு அமைவாக கடந்த டிசம்பர் மாதம் அகில தனன்ஜய அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு பயணமாகி பரிசோதனைகளுக்கு முகங்கொடுத்தார். குறிப்பிட்ட பரிசோதனை அறிக்கையின் படி, அகில தனன்ஜய ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசுவது உறுதிசெய்யப்பட்டதுடன், உடன் அமுலுக்கு வரும் வகையில், அகில தனன்ஜயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை தடை வதிக்கப்பட்டது. எனினும், அவர் பந்து வீச்சு பாணியை மாற்றியமைக்கும் பட்சத்தில் அவரால் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பந்து வீச முடியும் என ஐசிசி சுட்டிக்காட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சுழற்பந்து பயிற்றுவிப்பாளர் பியல் விஜேதுங்கவின் மேற்பார்வையின் கீழ், அகில தனன்ஜய தனது பந்து வீச்சில் மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சிகளை மேற்கொண்டார். தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டதன் மூலமாக பந்து வீச்சு பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெறும் 17 வீரர்கள்….

பின்னர், தனது புதிய பந்து வீச்சு பாணியை பரிசோதிக்கும் வகையில், கடந்த மாதம் 31ம் (ஜனவரி) திகதி, சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான பியல் விஜேதுங்கவுடன் அகில தனன்ஜய இந்தியாவுக்கு பயணமானார். அங்கு சென்று சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிலையத்தில் வைத்து பந்துவீச்சு பரிசோதனைக்கு மேற்கொண்டார்.

இதன்படி தற்போது வெளியாகியுள்ள பரிசோதனையின் முடிவுகளின் படி, சர்வதேச போட்டிகளில் அகில தனன்ஜய மீண்டும் பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அனுமதியின் அடிப்படையிலேயே அகில தனன்ஜய தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் தனது புதிய பந்து வீச்சு பாணியில் அகில தனன்ஜய உள்ளூர் போட்டிகளில் பந்து வீசி வருகின்றார். தற்போது நடைபெற்று வரும் கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 தொடரில் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் இவர், 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் உள்ளூர் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்த ப்ரீமியர் பிரிவு A நான்கு நாள் போட்டித் தொடரின் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க