இலங்கை அணிக்கு திடீர் வெற்றி எப்படி சாத்தியமாகியது?

1340

தென்னாபிரிக்காவின் டேர்பன் – கிங்ஸ்மீட் மைதானம், இளம் இலங்கை அணிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. நியூசிலாந்தில் தொடர் தோல்வி, அவுஸ்திரேலியாவில் படுதோல்வி என எந்த வித நம்பிக்கையும் அற்ற நிலையில், தென்னாபிரிக்காவுக்கு பயணமான இலங்கை அணி திடீரென இரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் சாதனை வெற்றியினை பரிசாக வழங்கியிருக்கிறது.

தனித்துப் பேராடிய குசல் பெரேரா டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை…..

தினேஷ் சந்திமாலின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, திமுத் கருணாரத்ன புதிய தலைவராக பணியமர்த்தப்பட்டார். அணிக்குழாத்தில் பல்வேறு மாற்றங்கள். பிரகாசிக்காத அனைவரையும் வெளியேற்றி, உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த வீரர்களுக்கு வாய்ப்பை கொடுத்தது தேர்வுக்குழு. கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தெரிவுக் குழாமிலிருந்து பயிற்றுவிப்பாளர் சந்திக நீக்கம்.

அதேபோன்று, பல்வேறு குழுப்பங்களும், சிக்கல்களும் அணியின் உடைமாற்றும் அறையை பிளவுப்படுத்திக் கொண்டிருந்த தருணத்திலும், இலங்கை இரசிகர்களுக்கு கொண்டாடக்கூடிய விடயமாக இருந்த ஒன்று புதிய வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு. முக்கியமாக உள்ளூர் போட்டிகளில் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் அசத்தியிருந்த லசித் எம்புல்தெனிய, மொஹமட் சிராஸ், அஞ்செலோ பெரேரா மற்றும் ஓசத பெர்னாண்டோ போன்ற வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்திருந்தது.

எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருந்த போதிலும், சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக தங்களை அடையாளப்படுத்தியிருந்தது தென்னாபிரிக்கா. உலகத் தரவரிசையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள், அம்லா, டு ப்ளெசிஸ், டீன் எல்கர் மற்றும் வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய குயிண்டன் டி கொக் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களை இலங்கையில் வைத்து மிரளச்செய்த சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹாராஜ் என பலம் பொருந்திய அணியாக இருந்த தென்னாபிரிக்காவுக்கு, வரப்போகும் எதிரணி பலமானதாக தோன்றவில்லை.

ஆனால், தொடர் தோல்விகளுக்கு மத்தியில் மெதுவாக நகர்ந்துக்கொண்டிருந்த இலங்கை அணிக்கு, தென்னாபிரிக்காவில் வைத்து டெஸ்ட் வெற்றியென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் ஆடுகளங்களுக்கும், தென்னாபிரிக்க ஆடுகளங்களுக்கும் இடையில் எவ்வித பெரிய மாற்றங்களும் இல்லை. வேகப்பந்து என்றால், அதற்குள்ள மரியாதையை துடுப்பாட்ட வீரர்கள் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். ஆஸி.யில் வைத்து வேகப்பந்துக்கு தடுமாறிய இலங்கை அணி, குறுகிய காலத்துக்குள் எவ்வாறு மீளும்? என்ற கேள்வியும் உள் மனதில் எழுந்துக்கொண்டிருந்தது.

டர்பனில் இலங்கை அணியும் குசல் பெரேராவும் பதிவு செய்த சாதனைகள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்….

குறிப்பாக சொல்லப்போனால், இலங்கை அணி இருந்த நிலையை பொருத்தவரை, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் வெற்றி பெறும் வாய்ப்பு 80 சதவீதத்திலும் குறைவாக தான் இருந்தது. அந்த 20 சதவீதமும், டேர்பன் மைதானத்தில் தென்னாபிரிக்கா அணி கடந்த காலங்களாக பெற்று வரும் மோசமான முடிவுகளும், இலங்கை அணி அந்த மைதானத்தில் பெற்ற ஒரு டெஸ்ட் வெற்றியும் தான் காரணம்.

கடந்த கால முடிவுகளின் ஏமாற்றத்துடன், புதுமுக வீரர்களான லசித் அம்புல்தெனிய மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோரை ஆடும் பதினொருவரில் இணைத்து தென்னாபிரிக்காவை எதிர்கொள்ள இலங்கை அணி திட்டம் வகுத்தது. இதில் புதுமுகம் இல்லாவிட்டாலும், பதினொருவரில் மற்றுமொரு முக்கிய இணைப்புதான் அவுஸ்திரேலிய தொடரின் பாதியில் இணைக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ.

அஞ்செலொ மெதிவ்ஸ் இல்லை, தினேஷ் சந்திமால் இல்லை, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உபாதை, ஓய்வு பெற்ற ரங்கன ஹேரத், தடைக்கு முகங்கொடுத்த அகில தனன்ஜயவுக்கு பிறகு அணியின் ஒரே ஒரு நம்பிக்கை தரும் சுழற்பந்து வீச்சாளருமாக இருந்த டில்ருவான் பெரேராவும் இல்லை. இப்படியான இழப்புகளுக்கு மத்தியில் இலங்கை அணி எவ்வாறு தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது?

போட்டியின் முதல் நாளில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாபிரிக்காவுக்கு வழங்கியது இலங்கை. எதிரணிக்கு துடுப்பாட்டத்தை வழங்கியது போன்று, அணிக்கான மிகச் சிறந்த பந்து வீச்சு எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி. இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை ஆரம்பம் முதல் தடுமாறச் செய்தார். முக்கியமாக எய்டன் மர்க்ரமின் விக்கெட்டை பதம் பார்த்த இவரது பந்து இரசிகர்களையும், வர்ணனையாளர்களையும் அதிகமாக ஈர்த்திருந்தது.

ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசினாலும், மத்திய வரிசையில் எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதற்கும், விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும் தவறியிருந்தமை இலங்கை அணியின் கடந்த கால பின்னடைவுகளுக்கு முழுக் காரணமாக இருந்து வந்தது. அவுஸ்திரேலிய தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள், மத்திய வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றத் தவறியமை இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், இம்முறை அந்த தவறு சற்று திருத்திக் கொள்ளப்பட்டிருந்தது. பெப் டு ப்ளெசிஸ் மற்றும் டெம்பா புவ்மா இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பிய போதும், ரன்-அவுட் மூலம் இணைப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட, மத்தியவரிசை வீரர்களின் விக்கெட்டுகளை சரிக்கும் வேலையை கசுன் ராஜித செய்து முடித்தார். லக்மால் மற்றும் எம்புல்தெனிய ஓட்டங்களை கட்டுப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்த விதம், தென்னாபிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களுக்கு சுருட்டியெடுக்க உதவியாக இருந்தது.

முதல் நாளில் போட்டியை தங்களது முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்த இலங்கை அணி, இரண்டாவது நாளில் சறுக்கியிருந்தது. வழமைபோல துடுப்பாட்டத்தில் வீழ்ந்தது இலங்கை அணி. குசல் பெரேராவின் அரைச்சதம் சற்று ஆறுதல் அளித்தது. எனினும், முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் முக்கிய புள்ளியாக அமைந்திருந்த விடயம் லசித் எம்புல்தெனிய மற்றும் கசுன் ராஜிதவின் இணைப்பாட்டம். அசுர வேகத்தில் வரும் பந்துகள் ஹெல்மட்டையும், உடலையும் தாக்கிய போதும், இருவரும் 9வது விக்கெட்டுக்காக 32 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த இணைப்பாட்டம் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட முன்னிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

புதிய சூழலில், புதுமுக வீரராக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் அணிக்கு இயன்றதை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை வைத்து, ஒவ்வொரு ஓட்டத்தின் பெறுமதியையும் உணர்ந்து களத்தில் துடுப்பெடுத்தாடிய லசித் எம்புல்தெனியவை பாராட்டியே ஆகவேண்டும். இவ்வாறு பின்வரிசை வீரர்களின் பங்களிப்புடன் ஓரளவு ஓட்டங்களை கடந்த இலங்கை அணிக்கு, தென்னாபிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நெருக்கடியை கொடுத்தது.

Photos: NCC vs Bloomfield C & AC – Major T20 Tournament 2018/19

ThePapare.com | Waruna Lakmal | 17/02/2019 Editing and re-using….

ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகள் கைவசத்துடன் 295 ஓட்டங்களை முன்னிலையாக பெற்றிருக்க, லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து மேலதிக 8 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணியை சுருட்டி, 304 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயிக்க உதவியிருந்தனர்.

304 என்ற வெற்றியிலக்கை தென்னாபிரிக்கா போன்ற மண்ணில் அடைவது என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. அவர்களது பந்து வீச்சாளர்கள் கடந்த காலங்களில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அணிகளை தினறடித்திருந்தமையை யாராலும் மறக்க முடியாது.

அந்த தினறலை இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் சந்திக்கத் தொடங்கியது. இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்த போதும் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் பின்னரே இலங்கை அணியின் வெற்றிக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புதுமுக வீரரின் வருகை நம்பிக்கை அளித்தது. ஓசத பெர்னாண்டோ, குசல் பெரேரா ஆகியோர் அணியை மூன்றாவது நாள் இறுதிவரை வழி நடத்தினர்.  

தொடர் தோல்விகளால் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி மிகப் பெரிய ஒரு போராட்ட மனநிலையுடனேயே இலங்கை வீரர்கள் மைதானத்தில் உள்ளனர். காரணம், தமது அடுத்த தோல்வியை எதிர்பார்த்தே பலரும் காத்திருக்கின்றனர். போராட்டமான மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து விட்டது……

நான்காவது நாளிலும் தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு இவர்கள் ஊக்கமளித்த போதும், டேல் ஸ்டெய்ன் தனது ஒரே ஓவரில் ஓசத பெர்னாண்டோ மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி மீண்டும் வெற்றிப் பாதையை தவறவிட்டது என்று எண்ணம் எழத் தொடங்கியது. இல்லை, இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை தட்டியெழுப்பியது தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் பெரேராவின் இணைப்பாட்டம்.

குசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு டர்பன் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள்……

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர்கள் சோர்ந்தனர். துடுப்பாட்டம் பலமாகியது. இலங்கையும் 200 ஓட்டங்களை கடந்தது. தென்னாபிரிக்க அணிக்கு அழுத்தம் தொடங்கியது. இக்கட்டான தருணத்தில் கேஷவ் மஹாராஜ் தனன்ஜய டி சில்வாவை ஆட்டமிழக்கச் செய்ய மீண்டும் தென்னாபிரிக்க அணி தலை தூக்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிக்கப்பட இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துடுப்பாட்ட வீரராக குசல் பெரேரா மாத்திரம். வெற்றிக்கு 304 ஓட்டங்கள், தென்னாபிரிக்க அணி பக்கம் திரும்பியது வெற்றி.

போட்டி தென்னாபிரிக்காவில் நடந்துகொண்டிருக்க, கடந்த காலங்களைப் போலவே, தோல்வியை எதிர்பார்த்த இலங்கை ரசிகர்களுக்கு மனதில் கவலை. வெற்றி என்ற நம்பிக்கையும் நிறைவுக்கு வந்து விட்டது.

ஆனால், இறுதி விக்கெட்டுக்காக குசல் பெரேராவுடன் இணைந்த விஷ்வ பெர்னாண்டோ தென்னாபிரிக்க அணிக்கு முழுமையான ஏமாற்றத்தை வழங்கினார். ஒரு பக்கம் குசல் பெரேரா அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் என்ற பொறுப்பை ஏற்று, ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க, மறுபக்கம் தனக்கு கிடைத்த பந்துகளில் விஷ்வ பெர்னாண்டோ விக்கெட்டினை காப்பற்றிக்கொண்டார். தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துகள் விஷ்வ பெர்னாண்டோவின் உடலை தாக்கிய போதும், அதனை தாங்கிக்கொண்டு, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை குசல் பெரேராவுக்கு வழங்கினார்.

அணியின் பின் வரிசைத் துடுப்பாட்ட வீரர் தனது சக்திக்கு மீறிய துடுப்பெடுத்தாட்டத்தை வெளிப்படுத்துவதை அறிந்துக்கொண்ட குசல் பெரேரா இறுதி நேரத்தில் சிக்ஸர்கள் பௌண்டரிகள் என விளாசி இலங்கை அணிக்கு சாதனை வெற்றியை அர்ஜுன ரணதுங்கவின் 1996 லேட் கட்டுடன் (Late Cut) பரிசாக வழங்கினார். இறுதிவரை போராடினால் எந்தவொரு சூழ்நிலையிலும் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை இலங்கை வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.  

இந்தத் தருணம் சற்று ஏக்கம் கொண்டதாக அமைந்தது. தோல்வி உறுதி என்று தொலைக்காட்சியை முடியிருந்த ரசிகர்கள் தொலைக்காட்சிக்கும் இணையத்திற்கும் முன்னர் மீண்டும் அமர்ந்து சமூக வலைத்தளங்களில் தமது மட்டில்லா மகிழ்ச்சியை பகிர்ந்தவாறு உள்ளனர்.  

இலங்கை அணியின் முன்னேற்றத்துக்கு காரணம் முழு அணியென்ற ரதீயில் ஒட்டுமொத்த வீரர்களும் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், மத்திய வரிசை மற்றும் பின் வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் மேற்கொண்ட பிரயத்தனம். துடுப்பாட்ட வீரர்கள் தவறுகளை விட்டாலும், எம்மால் முடிந்தளவு பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் மத்தியில் எழுந்தமை அணியின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அனுபவ வீரர்களின் இடத்தை பிடித்து தேசிய அணிக்குள் வந்துள்ள லசித் எம்புல்தெனிய மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோரின் வெளிக்காட்டல்களும், உத்வேகமும் இலங்கை அணிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு பரிசுதான். முதல் போட்டியிலேயே இவர்கள் வெளிப்படுத்தியுள்ள சிறந்த ஆட்டங்கள் எதிர்காலத்தில் அணிக்கு தெரிவாகவுள்ள புதிய வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக புதுமுக சுழற்பந்து வீச்சாளராக இணைந்து தென்னாபிரிக்க மண்ணில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதும், வேகப்பந்து வீச்சாளர்களை அச்சமின்றி எதிர்கொள்வதும் அவ்வளவு எளிதான காரியமல்ல.

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்த லசித் எம்புல்தெனிய

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு….

அதேநேரம், எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் அளவிற்கு வேகம் இல்லாவிடினும், பந்து வீச்சின் நேர்த்தியை வைத்துக்கொண்டு எதிரணி துடுப்பாட்ட வீரர்களை இலங்கை வீரர்கள் மிரட்டியிருந்தனர். ஒரு பந்து வீச்சாளர் மாத்திரமின்றி அனைவரும் இணைந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை சரித்திருந்தமை இலங்கை அணிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு முன்னேற்றம் தான். அதிலும், அவுஸ்திரேலிய மண்ணில் விக்கெட்டுகளை கைப்பற்ற தவறியிருந்த பந்து வீச்சாளர்கள், தென்னாபிரிக்க அணியை இரண்டு முறையும் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஒட்டுமொத்தமாக இலங்கை வீரர்களின் நம்பிக்கை மட்ட உயர்வே அணிக்கு இவ்வாறான சாதனை வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளது. சர்வதேச அணிகளை வெற்றிக்கொள்ளும் அளவிற்கு இலங்கை வீரர்களிடம் திறமை இருக்கிறது. இந்த திறமையினை வெளிக்காட்டுவதற்கான மனத்திடத்தை ஏற்படுத்திக்கொள்ளவே தவறுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய போன்ற முன்னணி அணிகளுக்கு படுதோல்விகளை வழங்கிய தென்னாபிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியுமாயின், ஏனைய அணிகளுக்கும் கடுமையான சவால்களை கொடுக்கக்கூடிய பலம் இலங்கை அணியிடம் உள்ளது என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.

எனவே, இனிவரும் போட்டிகளில் தங்களுடைய திறமைகள் முழுவதையும் இலங்கை அணியென்ற ரீதியில் ஒற்றுமையாக விளையாடி, வெற்றி என்பதையும் தாண்டி, எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் ஒரு அணியாக மீண்டும் வளர வேண்டும் என்பதே இலங்கை இரசிகர்களது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனால் யாரும் வாழ்க்கையை விமர்சனத்துடனேயே கொண்டு செல்வதில்லை. விமர்சனங்களைக் கடந்து சாதனை படைத்த இலங்கை அணிக்கு அடுத்த போட்டி மிகப் பெரிய சவாலைக் கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<