தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

6021

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெறும் 17 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் பல முக்கிய மாற்றங்களுடன் இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC)  இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அந்நாட்டு வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட  T20 தொடர் என்பவற்றில் பங்கேற்கின்றது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சாமிக்க கருணாரத்ன

இலங்கை டெஸ்ட் அணிக்கு அண்மையில் அறிமுகமாயிருந்த பந்துவீச்சு…

அதன்படி, தமது தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் தற்போது இடம்பெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, இந்த டெஸ்ட் தொடரின் பின்னர் ஒரு நாள் தொடரில் ஆடுகின்றது.

ஒருநாள் தொடருக்காக தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு முதற்தடவையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியிருந்த ஓசத பெர்னாந்துவுக்கு இலங்கை ஒருநாள் அணியிலும் முதல் முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் ப்ரியமால் பெரேரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை முதற்தடவையாக பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாயிருந்த ஒசத பெர்னாந்து, மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் செயற்பட்டிருந்தார். இதேநேரம், சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் அயர்லாந்து A அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்று முடிந்த உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 8 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

அதேவேளை, 23 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான ப்ரியமால் பெரேரா கோல்ட்ஸ் அணிக்காக இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த இரட்டைச் சதங்களுடன் ஜொலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு டர்பன் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான…

அயர்லாந்து A அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் திறமை காண்பித்திருந்த வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்துவும் தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை மீண்டும் பெற்றிருக்கின்றார்.

இலங்கை அணிக்காக முன்னர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் ஆடியிருக்கும் 20 வயது மட்டுமே நிரம்பிய அவிஷ்க பெர்னாந்து அயர்லாந்து A அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் 3 சதங்கள், 2 அரைச்சதங்கள் அடங்கலாக 104.6 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 523 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவிஷ்க பெர்னாந்துவுடன் இலங்கை அணியின் அனுபவ ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவும் இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரையில் 7,000 ஐ அண்மித்த ஓட்டங்களை கடந்த உபுல் தரங்க, கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஒரு நாள் தொடரை அடுத்து இலங்கை  அணியை சர்வதேச போட்டிகள் எதிலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்காக முதற்தடவையாக அழைப்புவிடுக்கப்பட்டிருந்த அஞ்செலோ பெரேரா, ஒருநாள் அணியிலும் தொடர்ந்தும்  நீடிக்கின்றார். இதன் மூலம் முன்னதாக சகலதுறை வீரராக 2013ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இலங்கை அணிக்கு அறிமுகமாயிருந்த அஞ்சலோ பெரேரா மீண்டும் தென்னாபிரிக்க அணியுடனான இந்த ஒருநாள் தொடர் மூலம், இலங்கை ஒரு நாள் அணிக்கு மீள் பிரவேசம் மேற்கொண்டிருக்கின்றார்

இதேநேரம், இலங்கை ஒருநாள் அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான இசுரு உதான, விஷ்வ பெர்னாந்து ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் விஷ்வ பெர்னாந்து தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வெற்றி கொள்ள 8 விக்கெட்டுகளை கைப்பற்றி பங்களிப்புச் செய்ததோடு, இசுரு உதான வெளிநாட்டு சுற்றுத் தொடர்களான T10 லீக் தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் T20 தொடர் ஆகியவற்றில் தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தார்.

மேலும், தென்னாபிரிக்க ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருந்த சுழல் வீரர் அகில தனன்ஜய இலங்கை அணிக்கு மீண்டிருக்கின்றார்.

இலங்கை அணியின் அண்மைய வெற்றிகள் பலவற்றிற்கு காரணமான அகில தனன்ஜய, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் சந்தகேத்திற்கு இடமான முறையில் பந்துவீசுகின்றார் என குற்றம் சாட்டப்பட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் தனது சந்தேகத்திற்கு இடமான பந்துவீச்சுப்பாணியினை மாற்றியதன் பின்னர் அவருக்கு இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் இடம் கிடைத்திருக்கின்றது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை அணி வழமை போன்று அணித்தலைவர் லசித் மாலிங்கவினால் வழிநடாத்தப்படுகின்றது.

இலங்கை அணிக்கு திடீர் வெற்றி எப்படி சாத்தியமாகியது?

தென்னாபிரிக்காவின் டேர்பன் – கிங்ஸ்மீட் மைதானம், இளம் இலங்கை…

இதேநேரம் காயமுற்றிருக்கும் அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்சலோ மெதிவ்ஸ், அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகள் எதிலும் ஜொலிக்காத தினேஷ் சந்திமால், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்க மற்றும் தசுன் சானக்க ஆகியோருக்கு தென்னாபிரிக்க ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 03ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க் நகரில் இடம்பெறும் போட்டியோடு ஆரம்பிக்கின்றது.

இலங்கை ஒரு நாள் குழாம்

லசித் மாலிங்க (அணித்தலைவர்), உபுல் தரங்க, அவிஷ்க பெர்னாந்து, நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்), குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அகில தனன்ஜய, அஞ்செலோ பெரேரா, ஒசத பெர்னாந்து, கமிந்து மெண்டிஸ், ப்ரியமால் பெரேரா, இசுரு உதான, விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன்

ஒருநாள் தொடர் அட்டவணை

முதலாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 3 – ஜொஹன்னஸ்பேர்க்

இரண்டாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 6 – செஞ்சூரியன்

மூன்றாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 10 – டர்பன்

நான்காவது ஒரு நாள் போட்டி – மார்ச் 13 – போர்ட் எலிசபெத்

ஐந்தாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 16 – கேப் டவுன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க