“பந்துவீச்சாளர்களை குறைகூற முடியாது” – பியல் விஜேதுங்க

Asia Cup 2022

706

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தமைக்கு பந்துவீச்சை குறைக்கூற முடியாது என இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியல் விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (01) நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத்தின் இரண்டாவது போட்டி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய அணியிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்

இதுதொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “உபாதைகள் காரணமாக எம்முடைய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இணைக்கப்படவில்லை. முதல் போட்டியில் இரண்டு அறிமுக வேகப் பந்துவீச்சாளர்கள் விளையாடினர். அனுபவம் என்ற ரீதியில் நாம் பின்னடைவில் இருந்தோம். ஆனால், நான் இதனை பின்னடைவாக கருதவில்லை. காரணம் அழுத்தத்தை சரியாக கையாள வீரர்கள் பழக்கப்படவேண்டும்.

இந்த வீரர்கள் திறமை உள்ளதன் காரணமாகவே அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒருநாளில் அவர்களுடைய பிரகாசிப்பை கண்டறிய முடியாது. அன்றைய தினத்தில் வெளிப்படுத்தும் பிரகாசிப்புகளே போட்டியின் முடிவை தீர்மானிக்கும். முதல் போட்டியில் 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, பந்துவீச்சாளர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லவேண்டும் என நினைப்பது சரியான விடயமல்ல” என்றார்.

அதேநேரம், இன்று (01) நடைபெறவுள்ள போட்டி, நேற்றைய தினம் இந்தியா – ஹொங் ஹொங் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் நடைபெறவுள்ளதால், ஒருசில மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மூன்றாவது சுழல் பந்துவீச்சாளருக்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“மூன்றாவது சுழல் பந்துவீச்சாளர் தொடர்பில் இதுவரை முடிவுசெய்யவில்லை. மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக முதன்மை சுழல் பந்துவீச்சாளர் இல்லாவிடினும், துடுப்பெடுத்தாடக்கூடிய சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் இணைக்கப்படலாம். இந்தியா – ஹொங் கொங் போட்டியை பார்த்து, இறுதி தீர்மானத்தை எடுப்போம்” என குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இருப்பது அணிக்கு பாதகமா? என்பது தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

“ரங்கன ஹேரத் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகம் அல்ல. ரங்கன ஹேரத் 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அணிக்காக விளையாடினார். எனவே அணியின் பலவீனங்கள் தொடர்பில் அவர் அறிந்திருப்பார் என கூறமுடியாது.

காரணம் கடந்த மூன்று வருடங்களாக நாம் அணியில் பல அபிவிருத்திகளை கண்டுள்ளோம். எம்முடைய பலவீனங்களை நிவர்த்திசெய்துள்ளோம். பயிற்றுவிப்பாளரால் மாத்திரம் அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன்”

இதேவேளை பங்களாதேஷ் அணியானது அனுபவ ரீதியில் பலமான அணியாக உள்ளது எனவும், இரண்டு அணிகளும் சமபலமான அணிகள் என்ற கருத்தையும் இவர் முன்வைத்துள்ளார். “பங்களாதேஷ் சிறந்த அணி. பல அனுபவ வீரர்கள் உள்ளனர். குறிப்பாக நான்கு அல்லது ஐந்து வீரர்கள் கடந்த 10 வருடகாலமாக ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் விளையாடிவருகின்றனர். நாம் எமது திறமையை வைத்துக்கொண்டு விளையாடவேண்டும். அதன்படி விளையாடினால் போட்டியில் வெற்றிபெறமுடியும்” என குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய தினம் (01) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<