கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல காணப்படுகின்றன. ஆனால் ஒர் நாள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. ஆம், இலங்கை – பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்காக ஆடும் போட்டி நாளை (13) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம்
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி வாய்ப்பு யாருக்கு?
இந்திய அணி இந்த அணி ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை என இரண்டு தொடர் வெற்றிகளுடன், தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக மாறியிருக்கின்றது.
மறுமுனையில் இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பினை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுடனான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டி வாய்ப்பினை பெறும் நிலைமை காணப்படுவதோடு, இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்பட்டால் இலங்கை அணி இறுதிப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) இந்திய அணியினை எதிர்கொள்ளும் வாய்ப்பினைப் பெறும். எனவே இலங்கை – பாகிஸ்தான் மோதல் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டி போன்று கருதும் அளவிற்கு முக்கியத்துவம் அடைந்திருக்கின்றது.
மழையின் தாக்கம்
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண சுபர் 4 போட்டிகளில் இலங்கை – பங்களாதேஷ் மோதல் தவிர அனைத்துப் போட்டிகளிலும் மழையின் தாக்கம் காணப்பட்டிருந்தது. இதேவேளை கிடைத்திருக்கும் வானிலைத் தரவுகளும் நாளை கொழும்பில் அதிகமான அளவில் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக குறிப்பிடுகின்றன.
இலங்கை அணி
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தமது முன்னணி பந்துவீச்சாளர்களை இழந்தே காணப்பட்டிருந்தது. ஆனால் பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இலங்கை வீரர்கள் இதுவரை மிகவும் சிறப்பான ஆட்டத்தினையே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பொறுப்பற்ற ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இது இலங்கை அணி மிகச் சிறப்பாக பந்துவீச்சினை வெளிப்படுத்திய இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை எதிர்பாராத தோல்வி ஒன்றை அடைவதற்கும் காரணமாக மாறியிருந்தது.
குறிப்பாக இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இலங்கை அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவரான திமுத் கருணாரட்ன மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். திமுத் கருணாரட்ன விரைவாக ஓட்டங்களை எடுக்க வேண்டிய போட்டியின் முதல் பவர் பிளே இல் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஏனைய துடுப்பாட்டவீரருக்கும் தேவையற்ற அழுத்தத்தை வழங்குவதோடு அது மோசமான முடிவுகளுக்கும் காரணமாகின்றது. கருணாரட்ன இந்த தவறுகளை திருத்துவது இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வழி வகுக்க முடியும். அணித்தலைவர் தசுன் ஷானக்கவும் துடுப்பாட்ட அழுத்தங்களை எதிர்கொள்வதில் தடுமாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஷானக்கவின் துடுப்பாட்டத்திலும் மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போராட்டத்தை காண்பித்தும் தோல்வியடைந்த இலங்கை அணி
இதேநேரம் அதிகம் குறிப்பிடப்பட வேண்டிய பாராட்டப்பட வேண்டிய வீரராக துனித் வெல்லாலகே மாறியிருக்கின்றார். வெறும் 20 வயது நிரம்பிய வெல்லாலகேவின் நிதானம், அழுத்தங்களை கையாளும் விதம் என்பன மிகவும் சிறப்பாக காணப்படுகின்றது. வெல்லாலகேவின் வருகை மத்திய வரிசையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட இடைவெளியினை பூர்த்தி செய்வதற்கான ஒரு அடித்தளத்தை இட்டிருக்கின்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை நிலைமைகளுக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை சுழற்சி செய்வதன் மூலம் இந்த தொடரில் வெற்றி கண்டிருக்கின்றது. பாகிஸ்தான் போட்டியிலும் இது தொடர வேண்டும்.
இலங்கை எதிர்பார்க்கை XI
பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீரசமரவிக்ரம, சரித்அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன்ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீ க்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித
பாகிஸ்தான் அணி
துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறந்த வீரர்களுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி காணப்படுகின்றது. ஐ.சி.சி. இன் ஒருநாள் அணிகளுக்கான துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் துடுப்பாட்டவீரர்கள் பாகிஸ்தான் தரப்பில் காணப்படுகின்றனர். அணித்தலைவர் பாபர் அசாம் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார். மறுமுனையில் இமாம்–உல்–ஹக், பகார் சமான் மற்றும் மொஹமட் ரிஸ்வான் என முன்னணி துடுப்பாட்டவீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை தரும் வீரர்களாக காணப்படுகின்றனர். சல்மான் அகா, சதாப் கான் போன்றோர் மத்திய வரிசை துடுப்பாட்டத்துக்கு பலம் சேர்க்க பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுத்துறை சஹீன் அப்ரிடியின் வேகத்தோடு முன்னிலை பெறுகின்றது.
இதேவேளை இந்திய அணியுடனான போட்டியில் உபாதைச் சிக்கல்களுக்கு உள்ளாகிய ஹரிஸ் ரவுப், நஸீம் சாஹ் ஆகியோர் இலங்கை அணியுடனான போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ள நிலையில் அவர்கள் இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் அணிக்கு அது பேரிழப்பாக மாறக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் எதிர்பார்க்கை XI
பகார் சமான், இமாம்–உல்–ஹக், பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், அகா சல்மான், இப்திகார் அஹ்மட், சதாப் கான், பாஹிம் அஷ்ரப், சஹீன் அப்ரிடி, மொஹமட் வஸீம், மொஹமட் நவாஸ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<