பாகிஸ்தான் அணியில் களமிறங்கவுள்ள 16 வயதுடைய இளம் வேகப் புயல்

72
©cricket australia

அவுஸ்திரேலிய அணியுடன் பிரிஸ்பேனில் நாளை (21) ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே குறுகிய காலத்தில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 16 வயது இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை நசீம் ஷா பெற இருக்கிறார். அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகமாகும் 9ஆவது இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொள்வார்

மொஹமட் ஹஸ்னைனின் வேகத்தால் இலங்கையை பந்தாடியது பாகிஸ்தான்

இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிராக ……..

கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் பிரகாசிக்கத் தவறினாலும், ஒருசிலர் ஜொலித்துள்ளனர்

அந்த வரிசையில் பாகிஸ்தானின் நட்சத்திர ஜாம்பவான் சஹீட் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.  

1996ஆம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற்றார். பின்நாளில் அவரது வயது குறித்த சர்ச்சை விவாதமாக மாறியது. இதனால் அவருக்கு பாகிஸ்தான் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை

அதேபோல, இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர்தான் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 16 வயதான நீசம் ஷா வை களம் இறக்க இருக்கிறது. அவ்வாறு களமிறங்கினால் சச்சினின் சாதனையை அவர் சமப்படுத்துவார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா பெப்ரவரி 15, 2003ல் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டேர் மாவட்டத்தில் பிறந்தார்.  

முதல் தர கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை 59 ஓட்டங்களுக்குள் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சில் நசீம் ஷா 145 கி.மீ. வேகத்தின் பந்துவீசுவார். 16 வயதில் பந்தை ஸ்விங் செய்யும் திறன் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற நசீம் ஷா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றார். இந்த நிலையில், கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடனான பயிற்சிப் போட்டியில் விளையாடினார்

இதுஇவ்வாறிருக்க, குறித்த பயிற்சிப் போட்டியில நசீம் ஷா விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தாய் திடீரென உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்ற சோகமான செய்தி வெளியாகியது

இதையடுத்து உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், இங்கிருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊருக்கு செல்ல கிட்டத்தட்ட 48 மணி நேரம் ஆகும்

அவிஷ்கவின் அதிரடி வீண்; பங்ளா டைகர்ஸின் வெற்றியை உறுதி செய்த பெரேரா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ……….

ஆனால் 24 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை செய்து முடிக்க வேண்டிய சூழலில் அவரது சகோதரர்கள் தாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும், தாயாரின் ஆசைப்படி அங்கு தொடர்ந்து விளையாடும்படியும் நசீம் ஷாவிடம் கூறினார்கள். இதனால் நசீம் ஷா பாகிஸ்தானுக்கு செல்லாமல் பயிற்சிப் போட்டியிலேயே தொடர்ந்து பங்கேற்றார்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாக அதிகாரி வாசிம் கான் கூறுகையில், “நசீம் ஷாவின் தாய் இறந்த செய்தி கிடைத்ததும் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால், தேசிய அணிக்காகத் தான் விளையாடுவதே தாயின் விருப்பமாக கடைசி வரை இருந்தது. அதை நிறைவேற்ற நான் விளையாடுவேன் என்று தாய் இறப்புக்குக் கூட செல்லவில்லை. நசீம் ஷாவை பாகிஸ்தானுக்குப் போகச்சொல்லிப் பேசினோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

ஆனால், நசீம் ஷாவுக்கு எந்தவிதமான மனரீதியான பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக எப்போதும் அவரைச் சுற்றி வீரர்கள் இருந்து கொண்டு அரவணைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

தனது தாயின் இறப்பின் சோகத்தை மனதில் வைத்துக் கொண்டு நசீம் ஷா பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். அவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. நசீம் ஷா பந்துவீச்சு அனைவரையும் ஈர்த்தது. தனது அதிவேமான பந்துவீச்சு, பவுன்ஸர்கள், ஸ்விங் ஆகியவற்றால் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை திணறவிட்ட நசீம் ஷா, மார்கஸ் ஹரிஸின் விக்கெட்டை வீழ்த்தினார்

இதனால் நாளை (21) நாளை ஆரம்பமாகவுள்ள பிரிஸ்பேன் டெஸ்டில் அவரை பாகிஸ்தான் அணி களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா களமிறங்கினால், 16 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகான வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கருடன் இணைவார்

அத்துடன், அவுஸ்திரேலியாவில் மிகச் சிறு வயதில் களமிறங்கும் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார். முன்னதாக 1953ஆம் ஆண்டு 17 வயதான அவுஸ்திரேலிய வீரரான க்ரெய்க் ஆஸி மண்ணில் மிக குறைந்த வயதில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட வீரராக இடம்பெற்றார்.  

இந்த நிலையில், நசீம் ஷாவின் டெஸ்ட் அறிமுகம் குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்,

“நசீம் ஷா அவரது பந்துவீச்சை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதுதான் எங்களுக்கான சிறந்த யோசனை. அவர் சிறந்த பந்துவீச்சு பாணியை கொண்டுள்ளார். பந்துவீச்சை அவரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவருடைய பந்து வீச்சு திறன் அவருக்குத் தெரியும்

சக வீரரை மைதானத்தில் தாக்கிய வீரருக்கு 5 வருட தடை

முதல்தர போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் கூட சிறப்பாக பந்து வீசினார். எங்களின் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார். அவர் பந்துவீசுவதை பார்க்கும்போது, எங்களது மேட்ச் வின்னராக இருக்க முடியும்” என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, உலகின் முதல்நிலை டெஸ்ட் வீரரான ஸ்டீவ் ஸ்மித் நசீம் ஷா குறித்து கருத்து தெரிவிக்கையில், “நசீம் ஷாவுக்கு என்னுடைய வயதில் பாதி வயதுதான் ஆகிறது. அவருக்கு 16 வயதுதான். அவரும் நானும் மோதுவது சுவாரஸ்யமாக இருக்கும்.

டெஸ்ட் போட்டியில் 16 வயதில் விளையாடும்போது படபடப்பாக இருக்கும். குறிப்பாக, வெளிநாட்டு மண்ணில் விளையாடும்போது கூடுதலாக இருக்கும். அவரை பாகிஸ்தான் அணி தேர்வு செய்தால், அவர் உண்மையிலேயே சில சிறப்பு வாய்ந்த திறமையை பெற்றிருப்பார். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

எங்களை பொறுத்த வரைக்கும் அவரை ஏராளமான ஓவர்கள் வீச வைத்து, சோர்ந்து போக முயற்சிப்போம். அவரால் ஏராளமான ஓவர்கள் வீச முடியாது. இதுதான் எங்களது திட்டமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தாயின் மறைவு செய்தியால் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நசீம் ஷா அறிமுகமாகி தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<