இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்,
இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அழுத்தத்துக்கு மத்தியில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், அவரை இலக்கு வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை அணியின் தலைவராக மட்டுமன்றி, முக்கியமான துடுப்பாட்ட வீரராகவும் உள்ள மத்தியூஸ், அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்துத் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை என்பதோடு, இலங்கை அணியும் தடுமாறியிருந்தது.
மறுபக்கத்தில், காலில் ஏற்பட்ட உபாதைக்காக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பின்னர், டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மிற்சல் ஸ்டார்க், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியைப் போன்று, சிறப்பான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“பாருங்கள், அவர் அழுத்தத்தில் இருக்கிறார். இங்கிலாந்துத் தொடரின் பின்னர் அவர் அழுத்தத்தில் இருப்பார். அத்தோடு, அணித்தலைவராக, அந்த அழுத்தம் அவருக்கு இருக்கும், அத்தோடு திறமையை வெளிப்படுத்தவதற்கான அழுத்தமும் இருக்கும். அதை, (எங்களது தலைவர்) ஸ்டீவ் (ஸ்மித்), எங்களுக்காகச் சிறப்பாகச் செய்கிறார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஸ்டார்க், “அணித்தலைவராக அவர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதோடு, முன்னுக்கிருந்தும் அணியை வழிநடத்தியுள்ளார். ஆகவே, அஞ்சலோ தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு, நாம் அதிக அழுத்தத்தை வழங்குவோம் என்பதில் சந்தேகமில்லை. டினேஷ் சந்திமாலோடு சேர்த்து, அவர் எங்களுக்கான பெரிய விக்கெட்டாக இருப்பார்” எனத் தெரிவித்தார்.
பந்துவீச்சாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஸ்டார்க், இலங்கையின் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத்தே அனுபவம் வாய்ந்தவர் எனவும், அவரை எதிர்கொண்டு, சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத் தூண்களாக இருந்த குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, திலகரட்ண டில்ஷான் ஆகியோர் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இலங்கை அணியின் அனுபவமற்ற தன்மை தொடர்பாகவும் ஸ்டார்க் கருத்துத் தெரிவித்தார்.
“எங்களுக்கெதிரான அணியில், முக்கியமான அந்த மூன்று பெயர்களும் இல்லாமை, மிக அற்புதமானது. துடுப்பாட்ட அணியில் அனுபவமிக்க அந்த வீரர்கள் காரணமாக, கடினமான தருணங்கள் சில ஏற்பட்டன. இலங்கை அணியில் அனுபவரீதியாக, அவர்கள் சிறிது குறைவாகவே உள்ளார்கள் என்பது வெளிப்படையானது” எனத் தெரிவித்த ஸ்டார்க், இவற்றுக்கு மத்தியில், இலங்கையைக் குறைத்து எடைபோட விரும்பவில்லை. “இங்கிலாந்தில் தொடர் தோல்வியொன்றைச் சந்தித்த பின்னர் வருகிறார்கள், ஆனால் அவர்களது சொந்த நிலைமைகளை அவர்கள் சிறப்பாக அறிவார்கள் என்பதோடு, போராட்டமொன்றுக்குத் தயராக இருப்பார்கள்” என்றார் அவர்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்