தவான், ஐயர் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு ஒரு நாள் தொடர் இந்தியா வசம்

492
Photo - BCCI

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணியை  இந்தியா 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியிருப்பதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என கைப்பற்றியுள்ளது.

முன்னதாக விசாகபட்டினத்தில் ஆரம்பமாகியிருந்த தொடரை தீர்மானிக்கும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

இந்த வருடத்தில் எந்தவொரு தொடரையும் தமது சொந்த மண்ணில் பறிகொடுக்காத இந்திய அணிக்கும், இதுவரை எந்தவொரு இருதரப்பு ஒரு நாள் தொடரையும் இந்திய மண்ணில் கைப்பற்றாத இலங்கை அணிக்கும் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம உள்வாங்கப்பட லஹிரு திரிமான்னவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. மறுமுனையில் இந்திய அணியில் சுகவீனம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலக அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை உபுல் தரங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் ஆரம்பித்திருந்தனர்.

போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே தனுஷ்க குணத்திலகவின் விக்கெட்டை இலங்கை அணி பறிகொடுத்தது. முதல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தாலும் அழுத்தங்கள் எதனையும் அதனால் உணராத உபுல் தரங்க பவுண்டரி மழை பொழிந்து அணியின் ஓட்டங்களை இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம உடன் இணைந்து துரித கதியில் அதிகரித்தார்.

இருவரும் இரண்டாம் விக்கெட்டுக்காக அதி சிறப்பான முறையில் 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர். இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களோடு ஓய்வறை நடந்தார். சதீர சமரவிக்ரம, உபுல் தரங்க ஜோடியின் இணைப்பாட்டம் தகர்த்தப்பட்ட போதிலும் தரங்கவினால் இலங்கை அணி தொடர்ந்தும் நல்ல நிலையிலையே காணப்பட்டிருந்தது.  

இவ்வாறனதொரு தருணத்தில், போட்டியின் 28 ஆவது ஓவரை வீசிய சுழல் வீரரான குல்தீப் யாதவ் குறித்த அந்த ஓவரில் உபுல் தரங்கவுடன் சேர்த்து இன்னுமொரு விக்கெட்டை (நிரோஷன் திக்வெல்ல) கைப்பற்றியிருந்தார். இதனால் விரைவான சதமொன்றை நெருங்கிய உபுல் தரங்க துரதிஷ்டவசமாக ஓய்வறை நடக்க வேண்டி ஏற்பட்டது.

குல்தீப் யாதவ்வின் அந்த ஓவரை அடுத்து இந்திய அணியின் சுழலினால் இலங்கை அணியின் சரிவு ஆரம்பமாகியது. மத்திய வரிசையில் வந்த அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, அணித் தலைவர் திசர பெரேரா ஆகிய எவரும் குறிப்பிடத்தக்கதாக பிரகாசிக்கவில்லை.

இந்த மோசமான துடுப்பாட்டம் காரணமாக இன்றைய நாளில் 300 ஓட்டங்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி, 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சதம் கடக்க தவறியிருந்த உபுல் தரங்க 82 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உபுல் தரங்க இந்தப் போட்டியின் மூலம் இந்த வருடத்தில் ஒரு நாள் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் கடந்த மூன்றாவது வீரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இறுதி 7 விக்கெட்டுகளையும் வெறும் 55 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இந்திய அணியின் பந்து வீச்சில், சுழல் வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்ததோடு, ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீட

இதனை அடுத்து இலகு வெற்றி இலக்கான 216 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, அகில தனஞ்சயவின் சுழலினால் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மாவை பறிகொடுத்து தமது இலக்கு தொடும் பயணத்தில் சிறிது தடுமாற்றம் காட்டி இருந்தது.

எனினும் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுமை கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 135 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது.

இவர்களின் இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களுடன் இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தனது 12 ஆவது ஒரு நாள் சதத்துடன் தனது தரப்பை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்ற சிக்கர் தவான் 85 பந்துகளுக்கு 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 100 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றதோடு, ஸ்ரேயாஸ் ஐயர் 65  ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்சய மற்றும் அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் மாத்திரம் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி ஆறுதல் தந்திருந்தனர்.

 

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 215 (44.5) – உபுல் தரங்க 95(82), சதீர சமரவிக்ரம  42(57), குல்தீப் யாதவ் 42/3(10), யுஸ்வேந்திர சாஹல் 46/3(10), ஹர்திக் பாண்டியா 49/2(10)

இந்தியா – 219/2 (32.1) – சிக்கர் தவான் 100*(85), ஸ்ரேயாஸ் ஐயர் 65(63), திசர பெரேரா 25/1(5)

போட்டி முடிவு – இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி