இறுதிப் போட்டியில் கடற்படையை வீழ்த்தி தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஹெவலொக்

156
Havelock-SC-Dialog-Ruby-League-2016-Runner-up

ஹெவலொக் விளையாட்டுக் கழகம், கடற்படை விளையாட்டுக் கழகத்தை 36 28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் இந்த பருவகால டயலொக் ரக்பி லீக் தொடரில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டது.

சென்ற வாரம் கண்டி விளையாட்டுக் கழகத்துடனான தீர்மானம் மிக்க போட்டியில் தோல்வியை தழுவியதால் சம்பியன் பட்டத்தை கை நழுவவிட்ட கவலையுடன் இப்பொட்டியில் களமிறங்கிய ஹெவலொக் அணி கடற்படை அணியை மிகவும் கடினமான போட்டியின் பின் வெற்றியீட்டி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

கடற்படை அணி, ஸ்டீபன் குரேகொரியின் நுட்பட்தினால் தனது முதலாவது ட்ரையைப் பெற்றுக்கொண்டது. பெனால்டி ஒன்றைப் பெற்றுக்கொண்ட கடற்படை அணி, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ரிசி தர்மபாலவின் நுட்பத்தினால் அந்த ட்ரைக்கான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. இதனை தொடர்ந்து கொன்வேஷன் உதையை திலின வீரசின்க பெற்றுக்கொடுத்தார்.

ஹெவலொக் அணி முதல் பாதியில் சற்று பின்தங்கிய நிலையில் விளையாடிய போதிலும், 21ஆவது நிமிடத்தில் ஹிரந்த பெரேராவின் திறமையால் கொன்வெர்டெட் ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டது. இந்த ட்ரையிற்காக ஹெவலொக் அணி தன் முன்னிலை வீரர்களை முழுமையாக உபயோகித்தது.

அடுத்த 10 நிமிடங்களே ஹெவலொக் அணி சார்பாக போட்டி திரும்பியிருந்தது எனலாம். எனினும் இரு தரப்பினராலும் மாறி மாறி பல பிழைகள் விடப்பட்டன. எனினும் இவ்வாறான ஒரு நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஹெவலொக் அணியின் நிரோஷன் பெரேரா போட்டியின் தனது முதலாவது ட்ரையை பெற்றுக்கொண்டார்.

அடுத்த 7 நிமிடங்களுக்கு போட்டியை தன்வசப்படுத்திக்கொண்ட கடற்படை அணியினர் வீரசின்கவின் 2 பெனால்டிகளால் புள்ளிகளை சமப்படுத்தினர். எனினும் 40ஆவது நிமிடத்தில் ஹெவலொக் அணி சார்பாக கெவின் டிக்சன் மூலம் வைக்கப்பட்ட ட்ரையினால் ஹெவலொக் அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருக்க முதல் பாதி நிறைவு பெற்றது.

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 17 – 13 கடற்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் கடற்படை அணியினர் தீவிரமாக விளையாடினர். எனினும் அவர்கள் விட்ட சிறு சிறு பிழைகளால் ட்ரையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் பலவற்றை இழந்தனர். அதிலும் நிவங்க பிரசாத்தினால் தவறவிடப்பட்ட ட்ரை மிக முக்கிய வாய்ப்பாகும்.

இத்தனை நிகழ்வுகளின் பின்னும் வீரசிங்க, அணிக்காக மிகவும் திறமையனான ட்ரை ஒன்றை பெற்றுக் கொடுக்க, கடற்படை அணியினர் மீண்டும் முன்னிலை பெற்றனர். எனவே, ஆட்டம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

நிரோஷன் பெர்னாண்டொவினால் விடப்பட்ட தவறொன்றிற்காக வழங்கப்பட்ட பெனால்டி ஒன்றை மீண்டும் தமக்கு சாதகமாக உபயோகித்த கடற்படை அணியினர் மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டதன் மூலம் தம் புள்ளி வித்தியாசத்தை 4 ஆக அதிகரித்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து வந்த 10 நிமிடங்களை தமக்கு சாதகமாக உபயோகித்த ஹெவலொக் அணியினர் மிகவும் சொற்ப நேர இடைவெளிக்குள் 2 ட்ரைகளை பெற்றுக் கொண்டனர். இவ்விரண்டு ட்ரைகளையும் நிரோஷன் பெரேரா பெற்றுக்கொடுத்ததன் மூலம் போட்டியில் தனது மொத்த ட்ரைகளின் எண்ணிக்கையை நான்காக அதிகாரித்துக் கொண்டார்.

இதனால் தீவிரமடைந்த கடற்படை அணியினர் வெற்றிப் பாதையில் இருந்து நழுவ ஆரம்பித்தனர். அதன் விளைவாக கடற்படை அணி வீரர் சமத் மதுஷங்கவிற்கு மஞ்சல் அட்டை வழங்கப்பட்டமையும் இவர்களை பெரிதும் தாக்கியது.

பின்னர் கசுன் டீ சில்வாவின் அபாரமான ஒட்டத்தினால் உதவியைப் பெற்றுக்கொண்ட கடற்படை அணியின் கயான் வீரரத்ன கொன்வெர்டெட் ட்ரை ஒன்றை கடற்படை அணி சார்பாக பெற்றுக்கொடுக்க அவ்வணிக்கு வெற்றியின் வாசனை மீண்டும் தெரிந்தது.

79 ஆவது நிமிடம் வரை இரு பக்கத்திற்கும் தள்ளாடிக்கொண்டிருந்த போட்டியை, ஷெனால் டீ சில்வா தன் திறமையால் ட்ரை ஒன்றை வைத்து ஹவெலொக் அணியின் பக்கம் திருப்பினார். நேரம் ஓட ஓட தமக்கான சந்தர்ப்பங்களை தவற விட்ட மன உளைச்சலில் கடற்படை அணியினர் விளையாடிய நிலையில் ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 36 – 28 கடற்படை விளையாட்டுக் கழகம்

ஆட்ட நாயகன்: துஷ்மந்த பிரியதர்ஷன (ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)