பசாலின் அபார கோலினால் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

3485

பங்களாதேஷ் கால்பந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் 10ஆவது நிமிடத்தில் பசால் மொஹமட் பெற்றுக் கொடுத்த கோலின் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

SAFF கிண்ண தொடருக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில்..

இலங்கை கால்பந்து அணி, சாப் சுசுகி கிண்ண தொடருக்காக பங்களாதேஷ் சென்றுள்ளது. குறித்த தொடருக்கு முன்னர் விளையாடும் நட்பு ரீதியிலான ஆட்டமாக இன்றைய போட்டி அமைந்திருந்தது. நில்பாமரியில் உள்ள ஷேய்க் கமால் அரங்கில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு மத்தியில் போட்டி ஆரம்பமானது.

இன்றைய போட்டியின் இலங்கை முதல் பதினொருவர்

சுபாஷ் மதுஷான், சுஜான் பெரேரா, அநுருந்த வரகாகொட, ஜூட் சுபன், ஷரித்த ரத்னாயக்க, அசிகுர் ரஹ்மான், மொஹமட் அபீல், சஜித் குமார மெண்டிஸ், கவிந்து இஷான், சர்வான் ஜோஹர், பசால் மொஹமட்

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்திய கோட்டிற்கு அண்மையில் இருந்து, எதிரணி வீரரிடமிருந்து வேகமாகப் பந்தைப் பெற்ற அபீல் மொஹமட் அதனை பசாலிடம் வழங்கினார். பசால் மைதானத்தின் மத்திய பகுதியில் இருந்து வேகமாக கோல் நோக்கி நீண்ட தூரம் உதைந்த பந்து பங்களாதேஷ் அணியின் கோல் கம்பங்களுக்குள் செல்ல ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அணி முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 26ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர்களால் இலங்கை அணியின் கோல் எல்லைக்குள் செலுத்தப்பட்ட பந்தை, மற்றொரு வீரர் கோலுக்குள் ஹெடர் செய்தார். எனினும், கோலுக்கு அண்மையில் இருந்து இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா அதனை சிறந்த முறையில் தடுத்தார்.

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF)…

முதல் பாதியில் இலங்கை அணியினர் எதிரணியின் கோல் எல்லையில் அதிக ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் மத்திய கள வீரர்கள் சற்று வேகமாக ஆடினர். எனினும், பங்களாதேஷ் அணியின் முன்கள வீரர்களின் முயற்சிகளை தடுக்கும் வகையில் இலங்கை அணியின் பின்களம் பலமாக இருந்தது.

முதல் பாதி நிறைவுறும் தருவாயில், இலங்கை அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஹர்ஷ பெர்னாண்டோ பின்களத்தின் இடது புறத்தில் ஆடும் வீரராக களமிறக்கப்பட்டார்.

முதல் பாதியில் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டும் சொந்த மைதானத் தரப்பினரால் எந்தவித கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

முதல் பாதி: இலங்கை 1 – 0 பங்களாதேஷ்

ஆட்டத்தின் 49ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர்கள் உள்ளனுப்பிய கோணர் உதையை, இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா சிறந்த முறையில் பாய்ந்து பற்றிக்கொண்டார்.   

போட்டியின் 65 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய கள வீரர் சஜித் சமீர மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக டிலான் கௌஷல்ய களத்திற்கு உள்வாங்கப்பட்டார்

போட்டியின் 73ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர்களால் மைதானத்தின் எல்லையினூடாக முன்னோக்கி எடுத்து வந்து, வலது புற கோணர் திசையில் இருந்து கோலுக்குள் செலுத்தப்பட்ட பந்தை சுஜான் பெரேரா பாய்ந்து பற்றிக்கொண்டார்.

>> காணொளிகளைப் பார்வையிட  

சில நிமிடங்களில் இலங்கை அணியின் பெனால்டி பெட்டியின் கோட்டிற்கு அருகில் இருந்து பங்களாதேஷ் தரப்பினரால் வேகமாக கோல் நோக்கி அடித்த பந்தையும் சுஜான் பெரேரா பாய்ந்து பிடித்தார்.

அடுத்த நிமிடம் மீண்டும் பங்களாதேஷ் வீரர் கபுர் இக்பால் உள்ளனுப்பிய பந்தையும் சுஜான் தட்டி வெளியேற்ற, பங்களாதேஷ் அணியின் தொடர் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

மீண்டும் 87ஆவது நிமிடம் இலங்கை அணியின் கோலுக்கு அண்மையில் பின்கள வீரர்கள் பலரைத் தாண்டி பந்தைப் பெற்று இக்பால், கோல் நோக்கி செலுத்த அது சுஜானின் கைகளுக்கே சென்றடைந்தது.

போட்டி நிறைவை எட்டியிருக்கையில் இலங்கை அணியின் கவிந்து இஷானுக்குப் பதில் வீரராக இளம் சசன்க தில்ஹார மைதானத்திற்குள் நுழைந்தார்.

ஆட்டத்தின் உபாதை நேரத்தில் (Injury time), கோல் பெற்ற பசால் மொஹமட் உபாதைக்குள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் மரியதாஸ் நிதர்சன் களத்தில் நுழைந்தார்.

எனினும், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பங்களாதேஷ் வீரர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, பசாலின் ஒரே கோலுடன் இலங்கை அணி போட்டியை வென்றது.

இந்த வெற்றியானது, இலங்கை அணி சர்வதேசப் போட்டி ஒன்றில் பல வருடங்களின் பின்னர் பெற்ற முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: இலங்கை 1 – 0 பங்களாதேஷ்

கோல் பெற்றவர்கள்

இலங்கை – பசால் மொஹமட் 10’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<