இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெண்டிஸ்; மிக வலுவான நிலையில் இலங்கை

1764
@AFP

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் அபார சதங்களின் உதவியோடு முதல் இன்னிங்சில் 500 ஓட்டங்களை எட்டியுள்ளதுடன், எதிரணியை விட வெறும் 9 ஓட்டங்களே பின்தங்கிய நிலையில் உள்ளது.

[rev_slider LOLC]

பங்களாதேஷின் சிட்டகொங் நகரில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் முதல் இன்னிங்ஸ் (513) துடுப்பாட்டத்தினை முடித்த பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை அணியினர் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில்  48 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்தது. தனன்ஜய டி சில்வா 104 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

தனன்ஞய, குசலின் சிறப்பாட்டத்தால் இரண்டாம் நாளில் இலங்கை ஆதிக்கம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ்…

போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்கு இளம் வீரர்களான குசல், தனன்ஜய ஆகியோர் இரண்டாம் விக்கெட்டுக்காக 250 ஓட்டங்களினை பகிர்ந்து மிகவும் உறுதியான இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கியிருந்தனர். இதில் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்ற குசல் மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். மறுமுனையில் தனன்ஜய 150 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார்.  

மதிய போசண இடைவேளை வரை பங்களாதேஷ் அணியினால் இலங்கையின் எந்த விக்கெட்டுக்களையும் கைப்பற்ற முடியாது போயிருந்தது. போட்டியின் மதிய போசண இடைவேளையின் போது இலங்கை அணி  300 ஓட்டங்களினை நெருங்கியிருந்தது.

மதிய இடைவேளையினை அடுத்து பங்களாதேஷுக்கு மிகவும் எதிர்பார்ப்பாக இருந்த விக்கெட் ஒன்று கிடைத்தது. இந்த இன்னிங்சின் 80ஆவது ஓவரின் பின்னர் எடுக்கப்பட்டிருந்த புதிய பந்தின் மூலம் தனன்ஜய டி சில்வாவினை முஸ்தபிசுர் ரஹ்மான் வீழ்த்தியிருந்தார். 308 ஓட்டங்களினை இரண்டாம் விக்கெட்டுக்காக மெண்டிசுடன் பகிர்ந்திருந்த தனன்ஜய 173 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். 223 பந்துகளினை எதிர்கொண்டிருந்த அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 21 பெளண்டரிகளைப் பெற்றிருந்தார்.

இந்த அபார ஆட்டம் மூலம் தனன்ஜய டி சில்வா இலங்கை அணி சார்பாக அதிகுறைந்த டெஸ்ட் இன்னிங்சுகளில் (23) 1,000 ஓட்டங்களினை கடந்த வீரர் என்கிற சாதனையினை ரோய் டயஸ் மற்றும் மைக்கல் வன்டோர்ட் ஆகிய வீரர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே..

தனன்ஜய டி சில்வாவின் விக்கெட் பறிபோயிருந்த போதிலும், குசல் மெண்டிஸ்  தனியொரு நபராக 150   ஓட்டங்களை தாண்டி இலங்கை அணிக்கு நங்கூரமிட்டிருந்தார்.  மெண்டிசுடன் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ரொஷேன் சில்வாவும் கைகோர்த்து நிதானமாக ஓட்டங்கள் பெறத் தொடங்கியிருந்தார்.

மெண்டிசின் சிறப்பாட்டத்தினால் இலங்கை அணி 400 ஓட்டங்களினை இலகுவாக தாண்டியது. இந்நிலையில் இரட்டைச் சதத்தினை நெருங்கிக் கொண்டிருந்த மெண்டிசின் விக்கெட் பரிதாபகரமாக தய்ஜுல் இஸ்லாமின் சுழலில் வீழ்ந்தது. டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்ட இன்னிங்சினை காட்டியிருந்த மெண்டிஸ் 327 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 22 பெளண்டரிகள் அடங்கலாக 196  ஓட்டங்களினை குவித்து வெறும் 4  ஓட்டங்களால் கன்னி டெஸ்ட் இரட்டைச் சதத்தினை தவறவிட்டிருந்தார்.

மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதத்தினை பெற முடியாமல் 190 ஐ விட அதிகமான ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தது இது இரண்டாவது தடவையாகும்.

மெண்டிசின் விக்கெட்டினை இழந்த நிலையில் தேநீர் இடைவேளையினை எடுத்துக் கொண்ட இலங்கை அணிக்கு தொடர்ந்து ரொஷேன் சில்வா தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் அரைச்சதம் மூலம் பெறுமதி சேர்த்திருந்தார்.

ரொஷேனுடன் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஜோடி சேர, மேலதிகமாக எந்த விக்கெட்டுக்களையும் இழக்காது பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களினை (513) நெருங்கியவாறு  இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாளினை முடித்துக் கொண்டது.

மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி 138 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 503 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. ரொஷேன் சில்வா 87 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக இலங்கை அணிக்கு சற்று அழுத்தங்கள் தரும் விதமாக செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருக்கின்றார்.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

ஸ்கோர் விபரம்