சிறந்த களத்தடுப்பு அணி என்ற பெருமைக்காக இலங்கை இளையோர் அணி

50

இலங்கையில் இன்று (5) ஆரம்பமாகியிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறந்த களத்தடுப்பு அணியென்ற பெருமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை இளையோர் அணியின் தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார். 

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தங்கள் குறித்து எமது இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

இளையோர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ……..

இலங்கை இளையோர் அணி நாளைய தினம் தங்களுடைய முதல் போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், இந்த தொடருக்கான ஆயத்தங்கள் தொடர்பில் நிபுன் தனன்ஜய குறிப்பிடுகையில்,  

“ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக நாம் பல பயிற்சிப் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், தொடர்ச்சியாக பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம்.  இந்த பயிற்சிகளில் மூலம் நாம் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான அதிகமான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தோம். அத்துடன், கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு இந்த தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார். 

அத்துடன், இலங்கையில் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியும், இந்திய அணியிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், இம்முறை எத்தகைய திட்டங்களை இலங்கை அணி கொண்டுள்ளது என்பது குறித்தும் இவர் வெளிப்படுத்தியுள்ளார்.  

“கடந்த முறை (2016) நாம் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்திருந்தோம். ஆனால், இலங்கை கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்ப்பதற்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். அத்துடன், இம்முறை நாம் ஒவ்வொரு போட்டிக்குமாக தனித்தனி திட்டங்களை வகுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனால், வாய்ப்புகளை எமது பக்கம் பயன்படுத்திக்கொண்டு, இறுதிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் விளைாயடினால், சம்பியனாக முடியும்” 

அதேநேரம், குழாத்தில் உள்ள 15 வீரர்களும் அணிக்கு தேவையான முக்கிய வீரர்கள் என்பதை குறிப்பிட்ட நிபுன் தனன்ஜய, பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என சிறந்த அணியொன்று உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், கிண்ணத்தை வெல்வதுடன், தங்களுடைய களத்தடுப்பு எதிர்பார்ப்பு குறித்தும் நிபுன் தனன்ஜய குறிப்பிட்டார். 

“எமது அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள் என அனைவரும் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர். ஆனால், நாம் இதைவிடவும் அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு விடயம் களத்தடுப்பு. அதன்படி, இம்முறை இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் மிகச்சிறந்த களத்தடுப்பு அணி என்ற பெருமையை நாம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்”

இதேவேளை, இந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரானது, 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ணத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் நிபுன் தனன்ஜய தெளிவுப்படுத்தினார். 

“ஆசியக் கிண்ணம் என பார்க்கும் போது, உலகக் கிண்ணம் மிகவும் பெரிய சவாலான ஒன்று. ஆனாலும், ஆசியக் கிண்ணம் என்பது ஏனைய தொடர்கள் போன்றதும் அல்ல. அதிகம் போட்டித் தன்மையான தொடர். போட்டியாளர்களாக இருக்கும் அணிகள் பலமான அணிகள். 

Photos: Sri Lanka U19 Team Practice Session ahead of U19 Asia Cup 2019

“எமது அணியில் அனுபவமில்லாத புதிய வீரர்களும் உள்ளனர். அவர்கள் இந்த அணிகளுடன், போட்டியிடும் போது சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்வர். வீரர்களின் பங்களிப்புடன் இந்த தொடரை நாம் வெற்றிக்கொண்டால், உலகக் கிண்ண கனவை நாம் நெருங்கியுள்ளோம் என அர்த்தமாகும்” என்றார்.

இலங்கை அணி இளையோர் ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டியில் நேபாளம் அணியை நாளைய தினம் (6) எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<