இலங்கை 16 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணித் தேர்வுக்கு அழைப்பு

991

ஜோர்தானில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 2020 AFC சம்பியன்ஷிப் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிக்கு இலங்கை 16 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணியை தெரிவு செய்வதற்கான வீரர்கள் தேர்வுகள் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FFSL) நடத்தப்படவுள்ளது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த தேர்வு முகாமை 2019 ஜூன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.  இதற்கமைய, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பிறந்த வீரர்கள் இதில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.

பலமான அணிகளுடன் U16 ஆசிய சம்பியன்ஷிப்பில் மோதவுள்ள இலங்கை

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) …………

இரண்டு நாட்களுக்கு இடம்பெறும் இந்த தேர்வு முகாம் கொழும்பு 2 இல் அமைந்திருக்கும் சிட்டி கால்பந்து வளாகத்தில் காலை 07 மணி தொடக்கம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நாள் கொழும்பு மாவட்ட வீரர்களுக்கும் இரண்டாவது நாள் வெளி மாவட்ட வீரர்களுக்கும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ஜூன் 25 ஆம் திகதி – கொழும்பு மாவட்ட வீரர்களுக்கான தேர்வு
  • ஜூன் 26 ஆம் திகதி – வெளி மாவட்ட வீரர்களுக்கான தேர்வு

16 வயதுக்கு உட்பட்டோருக்கான 2020 AFC சம்பியன்ஷிப் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி A குழுவில் இடம்பெற்றுள்ளது. இலங்கையுடன் அந்தக் குழுவில் ஜோர்தான், தஜிகிஸ்தான், நேபாளம் மற்றும் குவைட் ஆகிய அணிகள் உள்ளன. இந்த தகுதிகாண் போட்டிகள் 2019 செப்டெம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் 22 திகதி வரைவரை நடைபெறும்.  

இதில் தகுதி பெறும் அணிகள் 2020இல் நடைபெறவிருக்கும் 16 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<