பாதுகாப்பான நிலையில் உள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர்

399

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் உபாதைக்கு ஆளாகிய மேற்கிந்திய தீவுகள் அணி அறிமுக வீரர் ஜெரேமி சொலொசானோ பாதுகாப்பான நிலையில் உள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் (CWI) சபை உறுதி செய்திருக்கின்றது.

திமுத்தின் அபார சதத்துடன் மே.தீவுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் இலங்கை!

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடுகின்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (21) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய நிலையில், இப்போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் முதல் இடைவெளியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அறிமுக துடுப்பாட்டவீரரான ஜெரெமி சொலொசானோ தலை உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார்.

இன்றைய நாளில் போட்டியின் 24ஆவது ஓவரின் போது ரொஸ்டன் சேஸின் பந்துவீச்சில் இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ன வலிமையாக அடித்த பந்து களத்தடுப்பில் ஈடுபட்ட ஜெரேமி சொலொசானோவின் தலைக்கவசத்தினை தாக்கியதோடு பந்து பட்ட பின்னர் சொலொசானோவும் மைதானத்தில் சுருண்டு விழுந்திருந்தார்.

தொடர்ந்து சொலொசானோ மைதானத்தில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் மூலம் பரீட்சிக்கப்பட்டதோடு, அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் துணையுடன் உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தகவல்களின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஜெரேமி சொலொசானோ தலை உபாதை சிக்கல்களில் இருந்து பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்திருப்பதோடு, முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு சொலொசானோவினை தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியை நோக்கி களமிறங்கும் இலங்கை

இதேநேரம், இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவடைந்திருக்கும் நிலையில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வருகின்ற இலங்கை அணி திமுத் கருணாரட்னவின் சதம் (132), தனன்ஞய டி சில்வா மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரின் அரைச்சதங்களுடன் 3 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<