இலங்கை இளம் மகளிர் கிரிக்கெட் அணி படுதோல்வி

1560

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி இன்று (17) இந்தியாவின் 19 வயதின் கீழ் மகளிர் A கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 77 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியுள்ளது.

>> ஓய்வை திரும்ப பெறுமாறு பென் ஸ்டோக்ஸுக்கு கோரிக்கை

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி அங்கே நான்கு மகளிர் அணிகள் பங்குபெறும் T20 தொடரில் ஆடி வருகின்றது. இந்த நிலையில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இந்தியாவின் 19 வயதின் கீழ் மகளிர் A கிரிக்கெட் அணியினை எதிர்கொள்ளும் போட்டி இன்று விசாகப்பட்டினம் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய வீராங்கனைகளுக்கு வழங்கினர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய வீராங்கனைகள் சௌமியா திவாரி மற்றும் ஸ்வேதா சராவத் ஆகியோரின் அரைச்சதங்களோடு  வலுப் பெற்றனர். இதனால் இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் A கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் A கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஸ்வேதா சராவத் 46 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சௌமியா திவாரி 54 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை மகளிர் அணி பந்துவீச்சு சார்பில் மனுதி நாணயக்கார ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 176 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர்கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

>> பிணையில் விடுவிக்கப்பட்டார் தனுஷ்க குணதிலக்க!

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் மனுதி நாணயக்கார அதிகபட்சமாக 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய 19 வயதின் கீழ் மகளிர் A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சோனம் யாதவ் மற்றும் அர்ச்சனா தேவி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா 19 வயதின் கீழ் மகளிர் (A) கிரிக்கெட் அணி – 175/1 (20) ஸ்வேதா சராவத் 68(46)*, சௌமியா திவாரி 65(54), மனுதி நாணயக்கார 43/1(4)

இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி – 98/9 (20) மனுதி நாணயக்கார 35(27), சோனம் யாதவ் 13/3(4), அர்ச்சனா தேவி 16/3(4)

முடிவு – இந்தியா 19 வயதின் கீழ் மகளிர் (A) கிரிக்கெட் அணி 77 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<