இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), தமக்கான போட்டிக் கொடுப்பனவுகளை வழங்காததனை அடுத்து கால்பந்து போட்டி நடுவர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இந்த வாரத்துக்கான போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுப்பர் சன்னை வீழ்த்த உதவிய புது மணமகன் ரிப்னாஸ்
திருமண பந்தத்தில் இணைந்து அடுத்த தினத்தில் களமிறங்கிய மொஹமட் ரிப்னாஸ், அணித் தலைவராக…
கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சம்மேளனம் (FFSL) இறுதி 3 தொடக்கம் 4 மாதங்களாக, அதாவது டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் ஆரம்பத்திலிருந்து போட்டிகளுக்குரிய நடுவர்களுக்கான கொடுப்பனவுகளை அவர்களுக்கு வழங்கவில்லை எனத் தெரியவருகின்றது. எனினும், சில நெருங்கிய தகவல்கள் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இவ்வாறான நிலைமை தொடராக நடக்கின்றது எனத் தெரிவிக்கின்றன.
டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் 14 ஆம் வாரப் போட்டிகள் ஆரம்பமாகும் நவம்பர் 25ஆம் திகதியில் (சனிக்கிழமை) இருந்தே நடுவர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருக்கின்றனர். அதோடு இதே நிலைமை பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் I) அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரிலும் நீடிக்கின்றதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த விடயம் தொடர்பாக ThePapare.com இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமரிடம் கேட்ட போது அவரின் கருத்து இவ்வாறு இருந்தது.
“ டயலொக் சம்பியன்ஸ் லீக் தற்போது இறுதிக் கட்டத்தினை நெருங்குவதால், நாங்கள் குறிப்பிட்ட போட்டிகளுக்காக தலைசிறந்த நடுவர்களை வழங்க எதிர்பார்த்திருக்கின்றோம். எனினும், சிறந்த நடுவர்களை இப்போட்டிகளில் நடுவர்களாக மாற்ற ஒப்பந்தம் செய்த போது அனைவரும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) கற்கைநெறிகளில் பங்கெடுக்க வெளிநாடு சென்றிருந்தனர். சிலர் அங்கிருந்து வந்திருந்தாலும், காயம் காரணமாக போட்டிகளில் நடுவராக செயற்படுவதில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றன. இப்படியாக நடுவர்கள் இல்லாத காரணத்தினை ஒட்டியே நாம் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம்.
டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்காகவும் டிவிஷன் – I போட்டிகளுக்காகவும் எம்மிடம் இருக்கும் சிறந்த நடுவர்களை (திலான் பெரேரா, நிவோன் ரொபேஷ், கசுன் வீரக்கொடி, அஷாந்த டயஸ் மற்றும் இர்ஷாத் பாரூக் போன்றோரை) நாங்கள் பயன்படுத்துவோம்.“
“ போட்டி நடுவர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தினை இலங்கை கால்பந்து சம்மேளனம் நீண்ட காலமாக வழங்காமல் இருக்கின்றது எனக் கூறுவதில் எந்தவித உண்மையும் கிடையாது. நாங்கள் ஆரம்பத்திலேயே அவர்களுக்குரிய (போட்டிகளுக்கான) முற்பணத்தினை செலுத்தியுள்ளதோடு, இறுதியான கொடுப்பணவை கடந்த வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வழங்கிவிட்டோம். சில போட்டிகளுக்கான கட்டணங்கள் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. எனினும் குறித்த அந்தப் போட்டிகளுக்கான அறிக்கைகளும், ஆவணங்களும் கால்பந்து சம்மேளனத்துக்கு (FFSL) கிடைக்குமிடத்து போட்டிக் கட்டணங்கள் உடனடியாக வழங்கப்படும். “ என்றார்.
நேற்று (25), டயலொக் கால்பந்து தொடரில் சுபர் சன் விளையாட்டுக் கழகம் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மட்டுமே நடைபெற, ஏனைய போட்டிகளை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. குறித்த போட்டியினை ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் கற்கை நெறியினை துபாயில் முடித்துக் கொண்டு நேற்று காலையில் நாடு திரும்பிய நிவோன் ரோபேஷ் அவரது துணை நடுவர்களோடு நிர்வகித்திருந்தார்.
பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட மெஸ்சி ஒப்பந்தம்
இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற ஆர்ஜென்டினா…
நாட்டின் முன்னணி கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக், யாழ்ப்பாணத்தில் நடைபெறப்போகும் இறுதிக் கட்டப் போட்டிகளோடு முடிவடைய இன்னும் நான்கு வாரங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன.
தற்போது போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதனால் தொடரில் பங்கேற்கும் கழகங்களும் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
ஏனெனில், தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியொன்றில் பங்கேற்பதற்காக, கம்பளை அணியான கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் மாத்தறை சிட்டி கால்பந்து கழகத்தினை எதிர்கொள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோதே போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அதேபோன்று, இராணுவப்படை விளையாட்டுக் கழகம், சொலிட் விளையாட்டுக் கழகத்தினை எதிர்கொள்ள அநுராதபுரம் செல்லும் வழியில் குருனாகலையில் வைத்தே (போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட) செய்தியினைக் கேள்விப்பட்டிருக்கின்றது.