தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை கனிஷ்ட அணி

367

அவுஸ்திரேலியா ஹோபார்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி மற்றும் இலங்கை கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான 3 நாட்களை கொண்ட டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் சிறந்த பந்து வீச்சின் காரணாமாக இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை கனிஷ்ட அணி 44 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட நிலையில் 160 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்படுகின்றது.

நேற்றைய முதல் நாள் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை கனிஷ்ட அணித் தலைவர் கமிந்து மென்டிஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார். அந்த வகையில் முதலில் துடுப்பாட களமிறங்கிய அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 79.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியிருந்த இலங்கை கனிஷ்ட அணி ஒரு கட்டத்தில் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியை அச்சுறுத்தியிருந்தது. எனினும் அதனையடுத்து களமிறங்கிய ஜெக் எட்வர்ட்ஸ் மற்றும் ஜொனதன் மெர்லோ ஆகியோர் தமது அறிமுக போட்டியிலேயே சதம் பெற்று கொண்ட அதேவேளை இக்கட்டனான சூழ்நிலையிலிருந்து அணியை மீட்டிருந்தனர்.

அந்த வகையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெக் எட்வர்ட்ஸ் 106 ஓட்டங்களையும் ஜொனதன் மெர்லோ ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் பதிவு செய்திருந்தனர். இலங்கை கனிஷ்ட அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நிப்புன ரன்சிக்க 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அதனையடுத்து, தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை கனிஷ்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லசித் குருஸ்புள்ளே மற்றும் விஷ்வ சதுரங்க ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 20 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் முதல் விக்கெட்டாக லசித் குருஸ்புள்ளே, ரயான் ஹெட்லியின் பந்து வீச்சில் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

அந்த வகையில் இலங்கை கனிஷ்ட அணி 8 ஓவர்கள் நிறைவில் 38 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்திருந்த நிலையில் 271 ஓட்டங்களால் பின்னிலையுற்று இருந்தது.

தொடர்ந்து இரண்டாம் நாளாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை கனிஷ்ட அணிக்கு அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி பந்து வீச்சாளர்கள் எவ்விதமான இலகு வாய்ப்புகளையும் வழங்கவில்லை. சிறப்பாக பந்துவீசிய அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி பந்து வீச்சாளர்கள் ஹசித போயகொடவை 10 ஓட்டங்களுக்கும் அணித் தலைவர் கவிந்து மெண்டிசை 7 ஓட்டங்களுக்கும் வீழ்த்தினர்.

அதனையடுத்து களமிறங்கிய சஞ்சுல நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேகரிக்க ஆரம்பித்த வேளை மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்த விஷ்வ சதுரங்க துரதிஷ்டவசமாக 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அதனையடுத்து வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல 44 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட இலங்கை கனிஷ்ட அணி ஒரு விக்கெட் மாத்திரமே எஞ்சிய நிலையில் மேலும் 160 ஓட்டங்களால் பின்னிலயுற்று இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகின்றது.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சாக் எவன்ஸ் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லோயிட் போப் மற்றும் வில் சதர்லேன்ட் ஆகியோர் தங்களுக்கிடையே தலா இரண்டு விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி (முதல் இன்னிங்ஸ்) – 309/6d (79.3) – ஜெக் எட்வர்ட்ஸ் 106, ஜொனதன் மெர்லோ 100*, ஜேசன் சங்கா 41, ரயான் ஹன்கே 17, நிப்புன ரன்சிக்க 46/3

இலங்கை கனிஷ்ட அணி (முதல் இன்னிங்ஸ்) – 149/9 (44) – லசித் குருஸ்புள்ளே 14, விஷ்வ சதுரங்க  39, கிரிஷான் ஆராச்சிகே 22, ஜெஹான் டேனியல் 17, நிபுன் சுமனசிங்க 16, ஹசித போயகொட 10, சாக் எவன்ஸ் 3/57, லோயிட் போப் 2/21, வில் சதர்லேன்ட் 2/20