இலங்கை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அணிகளை வீழ்த்திய கென்யா, மலேசியா

165

சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (08) ஆரம்பமான நான்கு அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மற்றும் இலங்கை இளையோர் அணிகள் தோல்விகளை சந்தித்துள்ளன.

நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை, இலங்கை இளையோர், மலேசியா மற்றும் கென்யா ஆகிய நான்கு ……..

இலங்கை இளையோர் அணி, கென்யா, மலேசியா, மற்றும் இலங்கை தேசிய அணி ஆகியன மோதும் நான்கு அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நேற்று ஆரம்பமாகியிருந்தது. இதில் இலங்கை அணி மற்றும் இலங்கை இளையோர் அணிகள் முறையே கென்யா மற்றும் மலேசியா அணிகளை தமது முதலாவது மோதலில் சந்தித்தன.  

இலங்கை எதிர் கென்யா

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய கென்யா அணி 54-35 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. குறிப்பாக போட்டியில் இலங்கையின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் விளையாடவில்லை. அவுஸ்திரேலியாவில் கழக மட்ட போட்டிகளில் விளையாடுவதன் காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. அத்துடன், மற்றுமொரு சிறந்த வீராங்கனையான கயானி திசாநாயக்கவும் உபாதை காரணமாக விளையாடியிருக்கவில்லை.

முதல் காற்பகுதியில் கென்ய அணி 14-10 என முன்னிலை வகிக்க, இரண்டாவது காற்பகுதியிலும் 14-11 என்ற முன்னிலையை பெற்று, 28-21 என்ற புள்ளிகள் கணக்கில் முதற்பாதியில் கென்யா ஆதிக்கத்தை செலுத்தியது.

Photo Album : Sri Lanka v Kenya | Quadrangular Netball Tournament 2019

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது பாதியிலும் முன்னிலையை அதிகரித்துக்கொண்ட கென்ய அணி, மூன்றாவது காற்பகுதியில் 12-07 என புள்ளிகளையும், நான்காவது பாதியில் 14-07 புள்ளிகள் எனவும் பெற்று, போட்டியில் வெற்றியடைந்தது.

இலங்கை இளையோர் அணி எதிர் மலேசியா

மலேசிய அணியுடன் விளையாடிய எந்தவொரு அனுபவமும் இன்றி களமிறங்கிய இலங்கை இளையோர் அணி 78-16 என்ற புள்ளிகள் கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

மலேசிய அணியில் இளம் வீராங்கனைகள் இணைக்கப்பட்டிருந்தாலும், அனுபவ வீராங்கனைகளும் விளையாடியிருந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கை இளையோர் அணி புதிய பயிற்றுவிப்பாளர் மலிந்து குமாரி கமகேவின் கீழ் குறைந்த காலப்பகுயிலேயே பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

Photo Album: Sri Lanka Youth v Malaysia | Quadrangular Netball Tournament 2019

போட்டியை பொருத்தவரை முதல் காற்பகுதியில் 22-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த மலேசிய அணி, இரண்டாவது காற்பகுதியில் 12-04 என்ற புள்ளிகள் முன்னிலையுடன், முதற்பாதியில் 34-09 என்ற புள்ளிகளால் முன்னிலைப்பெற்றது.

மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணி மூன்றாவது காற்பகுதியில் 23-04 என்ற புள்ளிகளாலும், நான்காவது காற்பகுதியில் 21-03 என்ற புள்ளிகளாலும் முன்னிலைப்பெற்று வெற்றிபெற்றது.

இதேவேளை, இன்றைய தினம் இரண்டு போட்டிகளில் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கென்யா அணி, மலேசிய அணியை (பிற்பகல் 3.00) எதிர்கொள்ளவுள்ளதுடன், இலங்கை அணி, இலங்கை இளையோர் அணியை (மாலை 05.00) எதிர்கொள்ளவுள்ளது. போட்டிகள் அனைத்தும் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளன.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<