வட மாகாண வீரர்களின் சாதனையே தேசிய அணிக்கான தெரிவு

1108

வட மாகாணத்தில் இரு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முகாமையாளர் ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார்.

”யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் டெஸ்ட் குழாமில் 16 ஆவது வீரராக இருக்கும் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் (விஜயகாந்த்) வியாஸ்காந்த். அந்த பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் வருவது மிகப்பெரிய சாதனையாகும்” என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் வீரர் வியாஸ்காந்த்

இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இதுபற்றி விளக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் திங்கட்கிழமை (16) நடைபெற்றபோதே ஹேமந்த தேவப்பிரிய இதனை தெரிவித்தார்.

யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான வியாஸ்காந்த் இந்த டெஸ்ட் தொடருக்கு மேலதிக வீரராக இலங்கை இளையோர் குழாமில் முதல் முறை சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒருநாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாகாண மட்ட கிரிக்கெட் தொடரில் திறமையை வெளிப்படுத்திய பல வீரர்களும் இந்தியாவுடனான இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

”தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளால் தேர்வாளர்களுக்கு அனைத்து மாகாணங்களில் இருக்கும் வீரர்களையும் பார்க்க முடிந்தது. அணித் தேர்வில் அந்த திறமைகள் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லதொரு குழாம் எமக்கு கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு ஆடக்கூடிய வீரர்கள் இருக்கும் ஒரு குழாமாக இது உள்ளது. தமது திறமைகளை வெளிக்காட்ட அந்த வீரர்களுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமையவுள்ளது” என்று ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்தார்.

பந்துவீச்சில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வரும் வியாஸ்காந்த் கடந்த ஜூலை 13, 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணிக்காக அதிகபட்சம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக் குழுவினரின் அவதானத்தை பெற்றுள்ளார்.

அதேபோன்று 19 வயதுக்கு உட்பட்ட வட மாகாண அணியின் தலைவராக செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் எஸ். மதுஷனும் இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொழும்பு, NCC மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கு தமது அணி தயாராக இருப்பதாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய பெரேரா குறிப்பிட்டார்.

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் தடை

”சமபலமான அணி ஒன்று எம்மிடம் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர் முழுவதும் நன்றாக ஆட எதிர்பார்த்துள்ளோம். இந்திய அணி பலமான அணியாக இருந்தபோதும் எமது அணியும் அதற்கு நிகராக உள்ளது. தொடரை சிறந்த முறையில் பூர்த்தி செய்யவே எதிர்பார்த்திருக்கிறோம்” என்று வென்னப்புவ புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சகலதுறை வீரரான நிபுன் தனஞ்சய நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை இளையோர் குழாமில் கடந்த முறை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் ஆடிய ஐந்து வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் வீரர் துனித் வெல்லாலகேவும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.  

”இந்த குழாத்தில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஆடிய வீரர்களுடன் 1999 ஆம் ஆண்டு பிறந்த வீரர்களும் உள்ளனர். இந்த தொடரிலும் அடுத்து வரவிருக்கும் ஆசிய கிண்ண தொடரிலும் எதிர்வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண அணியில் ஆட முடியுமான வீரர்கள் அதிகம் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே அணி தேர்வுகள் இடம்பெற்றபோதும் அடுத்த இளையோர் உலகக் கிண்ணமே பிரதான இலக்காக உள்ளது” என்று ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டித் தொடர் ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையுடன் இணைந்து எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பல சுற்றுப்போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

”19 வயதுக்கு உட்பட்ட சுற்றுப்போட்டிகள் இளம் வீரர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்த வழி ஏற்படுத்தி கொடுப்பதாக உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையாக நாம் இந்திய கிரிக்கெட் சபையுடன் நீண்ட காலமாக நல்ல உறவை பேணி வருகிறோம். இந்திய கிரிக்கெட் சபையுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இதேபோன்ற இரு தரப்பு சுற்றுப்பயணங்களை எதிர்வரும் காலங்களிலும் நடத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

இந்திய கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது. வயது மட்ட போட்டி தொடர்களில் அவர்கள் பலம் மிக்கவர்களாக உள்ளனர். இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இலங்கை சுற்றுப்பயணம்  இலங்கை இளம் வீரர்களுக்கு தமது திறமை மற்றும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<