15 வயதுக்கு உட்பட்ட கொழும்பு சம்பியன்களாக ஹமீத் அல் ஹுஸைனி, கேட்வே கல்லூரி அணிகள்

449
Hameed Al Husseinie v Thurstan College - Schools Football - Finals - Cooray Park - 18/10/2016 - The Victorious Hameed Al Husseinie squad with their coaching and support staff.

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்கு உட்பட்ட சமபோஷ கால்பந்து சம்பியன்சிப் போட்டிகளின் கொழும்பு பிராந்திய பாடசாலை அணிகளுக்கு இடையலான போட்டியில் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியும், கேட்வே கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளன.

கொழும்பு பிராந்தியத்திற்கான 15 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இப்போட்டிகள் கூரே பார்க் மற்றும் கெம்பல் பார்க் ஆகிய மைதானங்களில் இடம்பெற்றன.

குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின்படி குழு மட்டத்தில் முதல் இரண்டு இடங்களையும் பெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகின. அதன்படி, ஸாஹிரா கல்லூரி, அர்துஸா கல்லூரி, ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, ரோயல் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, கேட்வே கல்லூரி, தஸ்டன் கல்லூரி மற்றும் ஹம்ஸா கல்லூரி ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகின.

முதல் காலிறுதியில் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, ரோயல் கல்லூரியை எதிர்த்தாடியது. இந்தப் போட்டியில் ஹமீத் அல் ஹுஸைனி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி பெற்றது.

போட்டிகளின் புகைப்படங்கள்

மற்றைய காலிறுதியில் அர்துஸா மற்றும் ஸாஹிரா கல்லூரி அணிகள் மோதின. இந்தப் போட்டி மிகவும் போராட்டம் மிக்க ஒரு போட்டியாக அமைந்தது. போட்டியில் மிகவும் கடினமான முயற்சிகளை மேற்கொண்ட ஸாஹிரா கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

மற்றொரு விறுவிறுப்பான போட்டியாக, புனித ஜோசப் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது. இந்தப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

கடைசியாக இடம்பெற்ற காலிறுதியில் தஸ்டன் கல்லூரி ஹம்சா கல்லூரியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி நிறைவில் எந்த அணியும் கோல்களைப் போடாத காரணத்தினால் இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தஸ்டன் கல்லூரி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது.

அரையிறுதி

ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி மிகவும் எதிர்பார்ப்பு மிக்கதாக இருந்தது. எனினும், போட்டி நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

ஸாஹிராவுக்கு அதிர்ச்சி கொடுத்த தஸ்டன் கல்லூரி

கொழும்பில் உள்ள இரு பலம் பொருந்திய அணிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் போராட்டம் மிக்கதாக இருந்தது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை.

பின்னர் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் வெற்றி கோலைப் பெற்றுக்கொள்வதற்கு போராடியது. போட்டியின் இறுதி நிமிடத்தில் தஸ்டன் கல்லூரி கோல் ஒன்றைப் போட்டது. எனினும் அது ஓப் சைட் கோல் என்று நடுவரல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின்னர் போட்டி சமநிலையில் நிறைவுபெற, வெற்றியைத் தீர்மானிப்பதற்கு இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டியில் தஸ்டன் கல்லூரி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று ஸாஹிரா கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இறுதிப் போட்டி

பின்னர் தொடரின் வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி அணியும் தஸ்டன் கல்லூரி அணியும் மோதின. இப்போட்டியின் முடிவில் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை வெற்றி கொண்டு, 15 வயதுக்கு உட்பட்ட சமபோஷ கால்பந்து சம்பியன்சிப் போட்டிகளின் கொழும்பு பிராந்திய சம்பியனாகத் தெரிவாகியது.

அதேபோன்று மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஸாஹிரா கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் புனித ஜோசப் கல்லூரி வெற்றி கொண்டது.

பெண்கள் பிரிவு

பெண்கள் பிரிவு போட்டியில் விசாகா கல்லூரி அணியை வெற்றி கொண்டதன் மூலம் 15 வயதுக்கு உட்பட்ட சமபோஷ கால்பந்து சம்பியன்சிப் போட்டிகளின் கொழும்பு பிராந்திய பெண்கள் சம்பியன் அணியாக கேட்வே கல்லூரி அணி தெரிவாகியது.