ஓருநாள் தொடரினை கைப்பற்றிய இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

Sri Lanka U17 vs Bangladesh U17 2024 

26
Sri Lanka U17 vs Bangladesh U17 2024 

சுற்றுலா பங்களாதேஷ் 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும், ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த பும்ரா

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணியானது இங்கே முதல் கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் மழையின் தாக்கம் காரணமாக முடிவுகள் அற்ற நிலையில் கைவிடப்பட்டிருக்க, மூன்றாவது போட்டி இன்று (28) காலியில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் இளம் வீரர்கள் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த போதிலும் இலங்கை பந்துவீச்சினை முகம்கொடுக்க முடியாமல் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தனர். பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் அஹ்சனுல் ஹக் 29 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்த நிலையில், இலங்கை சார்பாக ரசித் நிம்சார 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கித்ம விதானபதிரன 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 78 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கினை 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களுடன் அடைந்தனர்.

>>வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரம்; மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்!

இலங்கையின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் செனுஜ வக்குனாகொட 30 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் MD அப்துர் ரஹீம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அது உபயோகமாக அமைந்திருக்கவில்லை.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 1-0 எனக் கைப்பற்றிக் கொள்கின்றது.

இனி இலங்கை – பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

 

பங்களாதேஷ் (U17) – 77 (17) அஹ்சானுல் ஹக் 29, ரசித் நிம்சார 27/3, கித்ம விதானபதிரன 13/2

 

இலங்கை (U17) – 80/3 (16.4) செனுஜ வெக்குனாகொட 30*

 

முடிவு – இலங்கை U17 அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<