ப்ரீமியர் லீக்கில் முதல் வெற்றிக்காக போராடும் செல்சி

100

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயினின் லா லிகா மற்றும் பிரான்ஸின் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் நடைபெற்றன. 

சொந்த மைதானத்தில் செல்சி ஏமாற்றம்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கும் செல்சி அணி லெய்சஸ்டர் சிட்டிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியை 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தது. 

கடந்த வாரம் நடந்த தனது முதல் போட்டியில் மன்செஸ்டர் யுனைடட்டிடம் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த செல்சி புதன்கிழமை நடந்த ஐரோப்பிய சுப்பர் கிண்ணத்தில் லிவர்பூலிடம் பெனால்டி முறையில் தோற்ற நிலையிலேயே தனது சொந்த மைதானமான ஸ்டான்போர்ட் பிரிட்ஜுக்கு திரும்பியது. 

>>லா லிகா, புன்டஸ்லிகா பருவங்கள் அதிர்ச்சி முடிவுகளுடன் ஆரம்பம்

எனினும் போட்டி ஆரம்பித்த 7 ஆவது நிமிடத்திலேயே மேசன் மொண்டின் கோல் மூலம் செல்சியால் முன்னிலை பெற முடிந்தது. ஆனால் 67 ஆவது நிமிடத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த மத்திய கள வீரர் ந்டிடி (Wilfred Ndidi) லெய்சஸ்டர் சிட்டிக்காக பதில்கோல் திருப்பினார்.  

PSG அதிர்ச்சி தோல்வி

பிரான்ஸ் சம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி ரென்னர்ஸ் அணியிடம் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 

PSG அணி பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் இன்றியே இந்தப் போட்டியில் களமிறங்கியது. அந்தக் கழகத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நெய்மார் பேசப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது வாரமாகவும் PSG நெய்மார் இன்றி களமிறங்கியது. 

எனினும் எடிசன் கவானி போட்டியின் ஆரம்பத்தில் கோல் ஒன்றை புகுத்தி PSG அணியை முன்னிலை பெறச் செய்தார். எதிரணியின் பின்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தியே அவர் அந்த கோலை புகுத்தினார். 

எனினும் முதல் பாதி நிறைவடைய சற்று நேரத்துக்கு முன் பயி நியாங் (M’Baye Niang) பதில் கோல் திருப்பியதோடு அதனைத் தொடர்ந்து ரொமைன் டெல் கஸ்டிலோ தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் ரென்னர்ஸை வெற்றி பெறச் செய்தார்.   

அட்லெடிகோ வெற்றி ஆரம்பம்

புதிய வடிவம் பெற்றிருக்கும் அட்லெடிகோ மெட்ரிட் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் கேடப் அணியை வீழ்த்தி லா லிகா தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

அல்வாரோ மொராட்டா 23 ஆவது நிமிடத்தில் கிரன் டிரிப்பியரிடம் இருந்து கிடைத்த பந்தை கோலாக மாற்றி அட்லெடிகோவை முன்னிலை பெறச் செய்தார். எனினும் போட்டியின் ஆரம்பத்திலேயே இரு அணிகளும் சிவப்பு அட்டை பெற்ற நிலையில் எஞ்சிய நேரத்தை தலா 10 வீரர்களுடனே விளையாடின. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<