ஓசத பெர்னாண்டோ கன்னி சதமடித்தும் போராடுகிறது இலங்கை!

Courtsey - PCB Twitter

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய (4ஆம் நாள்) ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில், தமது இரண்டாம் இன்னிங்சில் 395 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய தினம் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பாபர் அசாம் மற்றும் அசார் அலி ஆகியோர் இணைந்து வேகமாக ஓட்டங்களை குவித்தனர்.

ஆபித், மசூட்டின் சதங்களினால் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய…

இவர்கள் இருவரும், இணைந்து 148 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், அசார் அலி சதத்தை பதிவுசெய்து ஆட்டமிழந்தார். அசார் அலி 118 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பாபர் அசாம் சக வீரர் மெஹமட் றிஸ்வானுடன் இணைந்து துடுப்பெடுத்தாடி தனது சதத்தை கடந்தார். பாபர் அசாமின் சதம் மற்றும் மொஹமட் றிஸ்வானின் 21 ஓட்டங்கள் உள்ளடங்கலாக பாகிஸ்தான் அணி மதியபோசன இடைவேளைக்குள் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 555 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்த ஓட்ட எண்ணிக்கையின் படி, இலங்கை அணி வெற்றியிலக்காக 476 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாட தொடங்கியது. மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, அழுத்தத்திற்கு மத்தியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது.

முன்னணி துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி தேநீர் இடைவேளையின் போது 86 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, மீண்டும் தங்களுடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்களை இழந்தது. தினேஷ் சந்திமால் 2 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர், மிகச்சிறந்த இணைப்பாட்டமொன்றை ஓசத பெர்னாண்டோ மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பகிர்ந்தனர். அரைச் சதம் கடந்திருந்த ஓசத பெர்னாண்டோ நிதானமாக துடுப்பெடுத்தாட, நிரோஷன் டிக்வெல்ல அவரது பாணியில் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

டிக்வெல்ல மற்றும் ஓசத பெர்னாண்டோ இணைந்து சத இணைப்பாட்டத்தை பெற்றதுடன், நிரோஷன் டிக்வெல்ல தனது அரைச் சதத்தை கடந்தார். எனினும், துரதிஷ்டவசமாக நிரோஷன் டிக்வெல்ல 65 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினை பறிகொடுக்க, இலங்கை அணி தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்தது.

எவ்வாறாயினும், இதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓசத பெர்னாண்டோ, தனது கன்னி டெஸ்ட் சதத்தை பதிவுசெய்ய, அடுத்துவந்த டில்ருவான் பெரேரா (5) இன்றைய ஆட்டநேரத்தின் இறுதியில் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

சந்திமாலின் அரைச் சதத்துடன் முன்னிலைபெற்ற இலங்கை அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் இரண்டாவது…

இன்றைய ஆட்டநேரத்தின் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், ஓசத பெர்னாண்டோ 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஏனைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இலங்கை அணி 271 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்தநிலையில், இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின், 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, 264 ஓட்டங்களை பெறவேண்டும்.

நாளை போட்டியின் இறுதியும் ஐந்தாவது நாளாகும்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க