வெற்றியுடன் முன் பருவத்தை முடித்த கொழும்பு, ப்ளூ ஸ்டார் அணிகள்

Super League - Pre-Season 2021

246
Colombo FC vs New Youngs FC & Blue Star SC vs Defenders FC

சுகததாச அரங்கில் இடம்பெற்ற சுபர் லீக் முன் பருவ கால்பந்து தொடரில் தமது இறுதி மோதலில் கொழும்பு கால்பந்து கழகம், நியூ யங்ஸ் கால்பந்து கழகத்தை 4-3 என வெற்றிக்கொள்ள, ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3-1 என டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை வெற்றி கொண்டது.

கொழும்பு கா.க எதிர் நியு யங்ஸ் கா.க  

இதற்கு முன்னர் எந்தவொரு வெற்றியையும் சந்திக்காத நியு யங்ஸ் அணி 2 வெற்றிகளை பெற்ற கொழும்பு கால்பந்து கழகத்துடன் மோதியது.  

>> நியு யங்சிற்கு அதிர்ச்சி கொடுத்த அப் கண்ட்ரி; ப்ளூ ஸ்டாருக்கு இரண்டாவது வெற்றி

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் கொழும்பு கால்பந்து கழக கோல் காப்பாளர் சாகிர் விட்ட தவறினால் கெலும் சன்ஞய நியு யங்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.  

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அடுத்த 10 நிமிடங்களில் மொஹமட் ஆகிப் கொழும்பு அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

எனினும், ரமேஷ் மென்டிஸ் முதல் பாதி நிறைவடைவதற்குள் நியு யங்ஸ் அணிக்கான அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

முதல் பாதி: கொழும்பு கா.க 1 – 2 நியு யங்ஸ் கா.க   

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது தரிந்து தனுஷ்க பந்தை நேராக கோலுக்குள் செலுத்தி நியு யங்ஸ் அணிக்கான அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

எனினும், 2 கோல்கள் முன்னிலையில் இருந்த நியு யங்ஸ் அணிக்கு எஞ்சிய நிமிடங்களில் போட்டியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போனது. 

இறுதி 35 நிமிடங்களுக்குள் கொழும்பு அணி ஆகிப், மொமஸ் யாபோ மற்றும் சர்வான் ஜோஹர் ஆகியோர் மூலம் தொடர்ச்சியாக கோல்களைப் பெற, போட்டி முடிவில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்றது. 

>> Video- தொடர்ந்து ஒவ்வொரு பருவகாலமும் கலக்கும் MESSI ! | FOOTBALL ULAGAM

இந்த வெற்றியுடன் கொழும்பு காால்பந்து கழகம் தாம் விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இந்த சுபர் லீக் முன் பருவத்தை நிறைவு செய்துகொண்டது. நியு யங்ஸ் அணி இரண்டு போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்து, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 

முழு நேரம்: கொழும்பு கா.க 4 – 3 நியு யங்ஸ் கா.க 

கோல் பெற்றவர்கள் 

  • கொழும்பு கா.க –  மொஹமட் ஆகிப் 29’ & 64’, மொமாஸ் யாபோ (P) 54’, சர்வான் ஜோஹர் 58’ 
  • நியு யங்ஸ் கா.க – கெலும் சன்ஞய 19’, தரமேஷ் மென்டிஸ் 40’, தரிந்து தனுஷ்க 49’,

ப்ளூ ஸ்டார் வி.க எதிர் டிபெண்டர்ஸ் கா.    

ஒரு தோல்வி மற்றும் 2 வெற்றிகளைப் பெற்றிருந்த ப்ளூ ஸ்டார் வீரர்களுக்கு எதிராக டிபெண்டர்ஸ் வீரர்கள் தோல்வி காணாமல் இந்தப் போட்டியில் களமிறங்கினர். 

ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் மதுஷான் டி சில்வா டிபெண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

எனினும், 28 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின் போது பசால் பந்தை சக வீரருக்கு வழங்கி, மீண்டும் தன்னிடம் பெற்று சிறந்த முறையில் பின்கள வீரர்களைக் கடந்து சென்று உள்ளனுப்பிய பந்து டிபெண்டர்ஸ் பின்கள வீரரின் கால்களில் பட்டு ஓன் கோலாக மாறியது. 

>> இரண்டாவது வெற்றியை சுவைத்த சீ ஹோக்ஸ், ரெட் ஸ்டார் அணிகள்

அடுத்த 7 நிமிடங்களில் மாற்று வீரராக வந்த செனால் சந்தேஷ் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்று முன்னோக்கி எடுத்துச் சென்று ப்ளூ ஸ்டார் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார். 

முதல் பாதி: ப்ளூ ஸ்டார் வி.க 2 – 1 டிபெண்டர்ஸ் கா.       

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் ப்ளூ ஸ்டார் வீரர்கள் தமது அட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். இதன் பலனாக செனால் சந்தேஷ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் ரிசான் தமது அணிக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தார். 

போட்டியின் இறுதி நிமிடங்களில் டிபெண்டர்ஸ் வீரர்கள் அடுத்த கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை வெற்றியளிக்கவில்லை. 

எனவே, 3-1 என்ற கோல்கள் கணக்கில் பெற்ற இந்த வெற்றியுடன் சுபர் லீக் முன் பருவத்தை ப்ளூ ஸ்டார் 3 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் நிறைவு செய்துகொண்டது. 

டிபெண்டர்ஸ் அணி தாம் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. டிபெண்டர்ஸ் மற்றும் ரினௌன் அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட முதல் வார மோதல் இன்னும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: ப்ளூ ஸ்டார் வி.க 3 – 1 டிபெண்டர்ஸ் கா.    

கோல் பெற்றவர்கள்    

  • ப்ளூ ஸ்டார் வி.க – ஹென்ரி (OG) 28′, செனால் சந்தேஷ் 35′, M.ரிசான் 52′ 
  • டிபெண்டர்ஸ் கா.க – மதுஷான் டி சில்வா 12′

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<