பங்களாதேஷ் டி20 குழாமுக்கு திரும்பியுள்ள முஷ்பிகூர் ரஹீம்

47

சுற்றுலா ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 15 பேர் அடங்கிய பங்களாதேஷ் டி20 குழாம் இன்று (05) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜூல் அபிதீனினால் பெயரிடப்பட்டுள்ளது. 

இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கிறது. முதல் தொடரான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றிய நிலையில் தற்போது அடுத்த தொடரான ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. 

ஒஷேன் தோமஸின் அதிரடி பந்துவீச்சால் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் இரு போட்டிகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளதுடன், 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி நாளை (06) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இருதரப்பு தொடரின் இறுதி தொடரான 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. 

அந்த அடிப்படையில் குறித்த இரு டி20 சர்வதேச போட்டிகளுக்குமான பங்களாதேஷ் அணியின் 15 பேர் அடங்கிய குழாம் தற்போது பெயரிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சகலதுறை வீரர் மஹ்மதுல்லாஹ் ரியாத் பங்களாதேஷ் டி20 அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த குழாமில் ஒரேயொரு வீரர் அறிமுக வீரராக இணைக்கப்பட்டுள்ளார். 

25 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான நாஸூம் அஹமட் எனப்படும் வீரர் முதல் முறையாக டி20 சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் நிறைவுக்குவந்த லீக் தொடர்களில் ஒன்றான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் பிரகாசித்ததன் அடிப்படையில் அவர் தற்போது பங்களாதேஷ் அணியில் டி20 சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு டி20 அறிமுகம் பெற்றுக்கொண்ட நாஸூம் அஹமட் இதுவரையில் 17 டி20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் அணி இறுதியாக டி20 சர்வதேச தொடரில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணியுடன் விளையாடியிருந்தது. குறித்த தொடரில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் செல்ல மறுத்திருந்த பங்களாதேஷ் அணியின் முக்கிய அனுபவ துடுப்பாட்ட வீரர் முஷ்பிகூர் ரஹீம் பாகிஸ்தான் டி20 தொடரை இழந்த நிலையில் தற்போது மீண்டும் பங்களாதேஷ் டி20 குழாமில் இணைந்துள்ளார். 

முதுகுப்பகுதி உபாதை காரணமாக ஐந்து மாதங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஓய்வில் இருந்து ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரில் குழாமுக்கு திரும்பிய வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சைபுடீன் தொடர்ந்து டி20 குழாமிற்கும் திரும்பியுள்ளார். இவர் இறுதியாக 2019 செப்டம்பரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் டி20 சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

21 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான நஜ்முல் ஹூஸைன் சாண்டோ ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டியின் போது உபாதைக்குள்ளானதன் அடிப்படையில் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது அடுத்த தொடரான டி20 சர்வதேச தொடரில் விளையாடும் வாய்ப்பையும் இழந்துள்ளார். 

வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்

இதேவேளை தொடர்ச்சியாக பிரகாசிக்காததன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ரூபல் ஹூஸைன் குழாமில் இடம்பெறும் வாயப்பை இழந்துள்ளார். மேலும் முஷ்பிகூர் ரஹீமின் மீள்வருகை காரணமாக துடுப்பாட்ட வீரரான மொஹமட் மிதுன் குழாமில் தவறவிடப்பட்டுள்ளார். 

ஜிம்பாப்வே தொடருக்கான 15 பேர் அடங்கிய பங்களாதேஷ் டி20 குழாம்

மஹ்மதுல்லாஹ் ரியாத் (அணித்தலைவர்), தமீம் இக்பால், சௌமியா சர்கார், மொஹமட் நயிம், லிட்டன் தாஸ், முஷ்பிகூர் ரஹீம், அபிப் ஹூஸைன், மொஹமட் சைபுடீன், மெஹெதி ஹஸன், அமினுல் இஸ்லாம், முஸ்தபீஸூர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம், அல் அமீன் ஹூலைன், ஹஸன் மஹ்மூத், நாஸூம் அஹமட் 

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (09) டாக்காவில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவதும் இறுதியுமான டி20 சர்வதேச போட்டி புதன்கிழமை (11) அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.   

 மேலும் பல  கிரிக்கெட் செய்திகளைப் படிக்க