துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மிக்கி ஆர்தர்!

Sri Lanka tour of England 2021

71

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இந்தநிலையில், தொடருக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

குசல் பெரேரா – தனுஷ்க குணத்திலக்கவின் அபாரத்தோடு நிறைவுற்ற பயிற்சிT20 போட்டி

அணியில் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, வீரர்களுக்கான துடுப்பாட்ட இடங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். அணியில் முதல் மூன்று இடங்களில் துடுப்பெடுத்தாடுவதற்கு அதிகமான வீரர்கள் உள்ளனர். எனினும், நான்கு தொடக்கம் ஆறாம் இடங்களில் துடுப்பெடுத்தாடுவதற்கான வீரர்கள் சரியாக இல்லை. பயிற்சியின் போது, இந்த விடயத்தில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

இதில் இரண்டு வீரர்களின் துடுப்பாட்ட இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். குறித்த வீரர்களிடம் அவர்களுக்கான பணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளோம். அவர்களால் அதனை செய்ய முடியும்.  முதல் மூன்று இடங்களில் சிறப்பாக ஆடிய பின்னர், மத்திய வரிசையில் ஓட்டங்களை குவிக்க முடியாவிட்டால் அது சரியாக இருக்காது

இதேவேளை, இலங்கை அணியின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களில், குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுவார்கள் என்பதையும் மிக்கி ஆர்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் மூன்று இடங்களில் குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் உள்ளனர். இது மிகவும் சிறந்த விடயம். எனினும், அடுத்த மூன்று இடங்களுக்கான துடுப்பாட்ட இடத்தை நாம் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். 

மத்தியவரிசையில் களமிறங்கும் வீரர்கள் ஒவ்வொரு ஓட்டமாகவும், துடுப்பாட்ட இடத்தை மாற்றிக்கொண்டும் ஓட்டங்களை குவிக்க வேண்டும். நாம் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போது தயார்படுத்தியிருக்கும் வீரர்கள் அதனை நன்கு அறிவர் என சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், துடுப்பாட்ட வீரர்களை வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தும் போது, அவர்கள் குழப்பத்துக்குள்ளாகுவர் என மிக்கி ஆர்தர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் துடுப்பாட்ட இடங்களை நிலை நிறுத்தவேண்டும். வீரர்கள் பல இடங்களில் துடுப்பெடுத்தாடும் போது, அவர்களுக்கிடையில் குழப்பம் ஏற்படும். ஒவ்வொரு துடுப்பாட்ட இடத்துக்கான பணிகள் வித்தியாசமானது. எமது பயிற்சியின் போது, துடுப்பாட்ட வீரர்களுக்கான பணியை தெளிவுப்படுத்தி வருகின்றோம். எனவே, வீரர்கள் எதனை செய்யவேண்டும் என்பதை அறிவர் என்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் T20I போட்டி எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு T20I போட்டிகள் 24ம் மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…