இலங்கை கபடி அணியின் தலைவராகும் அஸ்லம் சஜா

293

பங்களாதேஷில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை கபடி அணியின் தலைவராக கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரரான அஸ்லம் சஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த தொடருக்காக இலங்கை கபடி சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 12 பேர் கொண்ட குழாத்தில் அஸ்லம் சஜா உள்ளிட்ட 5 தமிழ் பேசும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3ஆவது பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் தொடர் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை போட்டித் தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை கபடி அணி விபரம் நேற்று (31) அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை கபடி அணிக்காக விளையாடி வருகின்ற நிந்தவூரைச் சேர்ந்த அஸ்லம் சஜா இலங்கை கபடி அணியின் தலைவராகவும், அஷான் மிஹிரங்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற இலங்கை கபடி அணியின் உப தலைவராக அஸ்லம் சஜா செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் மேலும் 4 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் மொஹமட் சபிஹான், மொஹமட் நப்ரீஸ், மட்டக்களப்பு – தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக் கழகத்தின் ராசோ பென்சி மற்றும் மட்டக்களப்பு Green Galaxy விளையாட்டுக் கழகத்தின் அமிர்தலிங்கம் மோகன்ராஜ் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் மொஹமட் சபிஹான். ராசோ பென்சி மற்றும் அமிர்தலிங்கம் மோகன்ராஜ் ஆகிய 3 வீரர்களும் கடந்த ஆண்டு நடைபெற்ற பங்பந்து கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக நதீக செல்லஹேவாவும், இந்திரதிஸ்ஸ தேதுனுபிட்டிய அணியின் முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கபடி அணி விபரம்:

அஸ்லம் சஜா (தலைவர்), அஷான் மிஹிரங்க (உப தலைவர்), துலான் மதுவன்த, பென்சி ராசோ, நிரூத பதிரன, அகில லக்ஷான், மஹீஷிக ஜயவிக்ரம, மொஹமட் நப்ரீஸ், மொஹமட் சபிஹான், உசித ஜயசிங்க,
ஏ. மோகன்ராஜ், வசன்த இதுனில்

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<