நியூசிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

171

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹெரி புரூக் படைத்த புதிய சாதனை!

அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு அங்கே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதோடு, இதுவே இரு அணிகளும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது பருவகாலத்திற்காக  விளையாடும் கடைசி தொடராகவும் காணப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி. இன் டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை அணிக்கு நியூசிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணம் மிக முக்கியத்துவமிக்கதாக அமைகின்றது. அத்துடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் பின்னர் ஒருநாள், T20i தொடர்களும் நடைபெறுகின்றன.

திமுத் கருணாரத்ன தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் அறிமுக துடுப்பாட்டவீரர் நிஷான் மதுஷ்கவிற்கு முதன் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 23 வயது நிரம்பிய விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான நிஷான் மதுஷ்க அண்மையில் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் திறமையினை வெளிக்காட்டியிருந்தார். மொத்தமாக 38 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 60 இற்கு அதிகமான துடுப்பாட்ட சராசரியுடன் 3000 இற்கு அதிகமான ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் அறிமுக வேகப் பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்கவிற்கும் இந்த டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும் இளம் துடுப்பாட்டவீரர் பெதும் நிஸ்ஸங்கவிற்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் (உபாதை காரணமாக) வாய்ப்பு வழங்கப்படவில்லை.

IPL தலைவர்களாக அவதாரம் எடுக்கும் வோர்னர், எய்டன்

கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் பெற்ற சகலதுறைவீரர் கமிந்து மெண்டிஸும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை, இருக்கும் அணியில் துடுப்பாட்டத்தில் நம்பிக்கை தரும் வீரர்களாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் காணப்பட நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால் ஆகியோரின் சேவையும் இலங்கை அணிக்கு கிடைக்கவிருக்கின்றது.

WATCH – இந்தியாவின் தொடர் வெற்றியால் இலங்கைக்கு பாதிப்பா? | ICC World Test Championship Final 2023

பந்துவீச்சினை பொறுத்தவரை பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாகவும் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களுடன் வேகப் பந்துவீச்சு சகலதுறைவீரரான சாமிக்க கருணாரட்னவும் இலங்கை டெஸ்ட் குழாத்திற்கு பலம் சேர்க்கின்றார்.

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 09ஆம் திகதி கிறைஸ்ட் சேர்ச்சிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 17ஆம் திகதி வெலிங்டனிலும் நடைபெறுகின்றது.

இலங்கை டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, அஞ்செலொ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், கமிந்துமெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல. நிஷான் மதுஷ்க, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, சாமிக்க கருணாரட்ன, கசுன் ராஜித, கசுன் ராஜித, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலான் ரத்நாயக்க

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<