டெல்லி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது உடல் நலக்குறைவால் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் மைதானத்திலிருந்து வெளியேறினார். மைதானத்தை சூழ காணப்படுகின்ற காற்று மாசுதான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருக்கும்போது 6ஆவது ஓவரில் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார்.  

இலங்கை – இந்திய போட்டியை பதம் பார்த்த டெல்லி மாசு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான…

இதனையடுத்து இலங்கை அணியின் உடல்தகுதி நிபுணர் மைதானத்துக்கு விரைந்து சுரங்க லக்மாலை ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11ஆவது ஓவரில் சுரங்க லக்மால் மீண்டும் ஆட்டத்தில் இணைந்து கொண்டார். எனினும், இன்றைய தினம் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான இலங்கை வீரரகள் மூக்குக்கவசம் (மாஸ்க்) அணிந்துகொண்டு விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் டெல்லியில் நிலவிய காற்று மாசு காரணமாக பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியாஇலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 3 முறை தடைப்பட்டன. அதன்போதும் இலங்கை அணி வீரர்கள் மூக்குக்கவசம் அணிந்து கொண்டு விளையாடினர்.

அப்போது உடல் நலக்குறைவால் சுரங்க லக்மால், லஹிரு கமகே ஆகிய வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இனிவரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

காற்று மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் சுவாசிப்பதில் அவதிப்பட்டதுடன், வாந்தி எடுத்ததாகவும் இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பிசிசிஐயிடம் கோரிக்கையும் விடுத்திருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்காமல் வீடு திரும்பிய இலங்கை வீரர்கள்

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘இனிவரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும்என்றார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மைதானம் முழுவதும் நிலவிய மாசடைந்த காற்று காரணமாக சுவாசிப்பதில் சிரமப்படுவதாகத் தெரிவித்து இலங்கை வீரர்கள் மூக்குக்கவசம் அணிந்து விளையாடியமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மைதானத்தில் கரும்புகை சூழ்ந்திருந்ததால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக இலங்கை அணியினர் போட்டி மத்தியஸ்தரிடம் புகாரிட்டனர். இதனை அடுத்து சுமார் 17 நிமிடங்கள் போட்டி தடைப்பட்டது. எவ்வாறாயினும் போட்டியின் பொது மத்தியஸ்தர், அணிகளது வைத்தியர்கள், உடற்கூற்று மருத்துவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்த கள மத்தியஸ்தர்கள் போட்டியை தொடர்ந்து நடத்தினர்.

பொதுவாக சீரற்ற காலநிலை, போதிய வெளிச்சமின்மை, மின்னல், மழை அல்லது இரசிகர்கள் குழப்பம் போன்ற காரணங்களுக்காகவே போட்டிகள் தடைப்படுவதுண்டு. ஆனால் காற்று மாசுபாடு காரணமாக போட்டி ஒன்று தடைப்பட்டதாக இதற்கு முன்னர் கேள்விப்படவில்லை. எனவே சர்வதேச கிரிக்கெட்டில் காற்று மாசுபாட்டினால் இந்த மாதிரி பாதுகாப்பு உறைகளைக் கொண்டு மூக்கை மறைத்தவாறு வீரர்கள் விளையாடியது இது தான் முதல்முறையாகும்.

இவ்வாறு இலங்கை வீரர்கள் சுவாசிக்க முடியாமல் மைதானத்தில் அவதிப்பட்டாலும், மறுபுறத்தில் இலங்கை வீரர்கள் நாடகமாடி போட்டியை நிறுத்துவதற்கு முற்பட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஷேவாக், கங்குலி உள்ளிட்ட வீரர்களும், அந்நாட்டின் ஊடகங்களும் குற்றம் சுமத்தியிருந்தன.

அறிமுக வீரர்களுடன் இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம்

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கருதப்படும் அளவைவிட காற்று மாசுபாடு பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக டெல்லியிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரக இணையத்தளமும் அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டிருந்தது. எனினும், கடும் காற்றுமாசுபாட்டின்போது ஆஸ்த்மா தாக்கம், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, வலிப்பு என்பன ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக இந்திய வைத்திய சங்கம் எச்சரித்துள்ளதுடன், அங்கு விளையாடுவதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், டெல்லியில் காற்று மாசடைதலானது 18 மடங்கைவிட அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் காற்றுமாசடைதல் பிரிவு அண்மையில் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போட்டியின் நான்காவது நாளிலும் இலங்கை அணி வீரர்கள் மூக்குக்கவசம் அணிந்து விளையாடியது, சுரங்க லக்மால் மைதானத்தில் வாந்தி எடுத்தது உள்ளிட்ட சம்பவங்கள் அந்த மைதானம் தொடர்ந்து விளையாடுவதற்கு பொருத்தமில்லை என்பதை உணர்த்தியுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பில் .சி.சி கவனம் செலுத்துமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.