இலங்கை – இந்திய போட்டியை பதம் பார்த்த டெல்லி மாசு!

1792

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளான இன்று (03) நடைபெற்ற போட்டியின் போது இலங்கை வீரர்கள் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றன.

தலைநகர் டெல்லியில் கடும் காற்றுமாசு நிலவுவதால் அங்கு நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாகமாஸ்க்அணிந்து விளையாடிய குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் காற்று மாசுபாட்டினால் இந்த மாதிரி பாதுகாப்பு உறைகளைக் கொண்டு மூக்கை மறைத்தவாறு வீரர்கள் விளையாடியது இது தான் முதல் முதல்முறையாகும்.

இப்போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, மதிய நேர இடைவேளைக்குப் பிறகு 5 விக்கெட்டுக்களை இழந்து 500 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், மைதானத்தில் நிலவுகின்ற அதிகப்படியான காற்றுமாசு காரணமாக இலங்கை அணி வீரர்கள் சுவாசிப்பதற்கு கஷ்டப்படுவதாகவும், அதனால் தொடர்ந்து களத்தடுப்பில் ஈடுபடுவது கடினம் எனவும் தெரிவித்து போட்டியை இடைநிறுத்துமாறு இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் நடுவர்களிடம் முறைப்பாடு செய்தார்.

கோஹ்லியின் சாதனை இரட்டைச் சதத்தோடு இந்தியா மேலும் வலுவான நிலையில்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்…

 இதனையடுத்து இலங்கை வீரர்கள் தமது மூக்கை மூடும் விதத்தில் மாஸ்க் அணிந்தனர். இதனால் இரட்டைச்சதம் குவித்த உற்காசத்தில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி, ஆடுகளத்திற்கு அருகாமையில் படுத்திருந்து நன்றாக சுவாசம் விடுவதுபோல செய்கை செய்தார். எனினும், கோஹ்லி இதனால் கோபப்பட்டு நடுவர்களிடம் முறையிட்டார். கோபத்தில் இருந்த கோஹ்லி டோனி போலவே மைதானத்தில் படுத்து சாந்தமாக முயற்சி செய்தார்.

இவ்வாறான பதற்றத்துக்கு மத்தியில் போட்டி 15 நிமிடங்களுக்கு தடைப்பட்டது. நடுவர்கள், இலங்கை அணி வீரர்கள், இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட அனைவரும் மைதானத்துக்கு விரைந்து சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

மேலும் இலங்கை அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் நில் லீ மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் மனோஜ் அபேவிக்ரம ஆகியோர் இலங்கை வீரர்களின் ஜேர்சியை அணிந்துகொண்டு மைதானத்துக்கு வந்து நடுவரிடம் இது குறித்து முறையிட்டனர்.

Umpires during day two of the 3rd test match between India and Sri Lanka Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

வீரர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை அணியின் 4 வீரர்கள் சுவாசிக்க முடியாமல் வாந்தி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், நடுவர்கள் இலங்கை அணியின் கோரிக்கைக்கு சம்மதிக்காததால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இடைநடுவே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மைதானத்தைவிட்டு முதலாவதாக வெளியேறினார். இவரையடுத்து பந்துவீசிக்கொண்டிருந்த லஹிரு கமகேயும் சுவாசிக்க முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவரின் எஞ்சிய பந்துகளை லக்ஷான் சந்தகன் வீசினார். இதனையடுத்து களத்தடுப்பில் 10 வீரர்கள் ஈடுபட்டனர். எனவே, அணிக்காக மேலும் உதிரி வீரர்கள் இல்லையென சந்திமால் நடுவர்களுக்கு அறிவித்தார்.  

இந்நிலையில் 3 பந்துகள் வீசிய இலங்கை அணி வீரர்கள் மீண்டும் பழையபடி புகார் அளித்தனர். இந்த நிலையில் கோஹ்லி கோபப்பட்டு துடுப்பு மட்டையை தூக்கி வீசி எறிந்தார். அதன்பிறகு சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த கோஹ்லி சில நேரத்தில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தார்.

அதன்படி, ஓய்வறையில் இருந்து கோஹ்லி போட்டியை இடைநிறுத்த வேண்டாம், தமது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொள்கிறோம் (டிக்ளேர்) என்று கூறினார்.

இவ்வாறான பல நிகழ்வுகள் அரங்கேற இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 537 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கினர்.

மெதிவ்ஸ் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீசுவதை எதிர்பார்க்கலாம் – ருமேஷ் ரத்னாயக்க

சகலதுறை வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் இந்திய அணியுடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்…

இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசடைகின்ற நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாங்களில் தேவையில்லாத பயிர்களை எரித்து விடுகின்றனர். இதனால் காற்றில் கலக்கின்ற புகை டெல்லிக்கு அச்சுறுத்தலாக மாறுவதாக மத்திய காற்று மாசுபாட்டு கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், டெல்லியில் மோசமான அளவில் காசு மாசடைவதை காணமுடிகின்றது. மதியம் ஒரு மணியளவில் இதன் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கிறது. வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்து வருகின்றதால் அங்குள்ள மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) விளக்கம் கோரியுள்ளது.

இப்போட்டிக்காக அதிக அளவில் புகைமாசு காணப்படுகின்ற டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தை ஏன் தெரிவுசெய்தீர்கள்? இதுதொடர்பில் முன்னதாக ஏன் அறிவிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோசமான துடுப்பாட்டத்தால் செலஞ்சர் கிண்ணத்தை பறிகொடுத்த இலங்கை

இந்தியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செலஞ்சர் கிண்ண இறுதிப் போட்டியில்…

இதற்கு பதிலளித்த பிசிசிஐ நிர்வாகம், இலங்கை வீரர்கள் தேவையில்லாமல் இந்த பிரச்னையை பெரிது படுத்துவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

மைதானத்திற்கு வந்த 20 ஆயிரம் ரசிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்திய வீரர்களும் இயல்பாகவே உள்ளனர். ஆனால் இலங்கை அணியினர் மட்டும் பிரச்சினையை ஏற்படுத்துவது வியப்பாக உள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேசுவோம்என்று இந்திய கிரிக்கெட் சபையின் பொறுப்பு தலைவர் அனில் கண்ணா தெரிவித்தார்.

மைதானத்தில் இருக்கும் நபர்களை கூட சரியாக பார்க்க முடியாத அளவுக்கு அங்கு மாசு நிலவி வருகிறது. இதன் காரணமாக வீரர்கள் சுவாசிப்பதில் தொடங்கி, விளையாடுவது வரை அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை மாசு நிலவி வருகிறது.  

இதன் காரணமாக முதல் நாள் போட்டியில் வீரர்கள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினர். அதுபோல் களத்தில் இருந்த நடுவர்களும் முகத்தை மூடிக்கொண்டு விளையாடினார்கள். மோசமான புகையின் காரணமாக இலங்கை வீரர்கள் அதிக கண் எரிச்சலை சந்தித்து இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கை வீரர்கள் சுவாசிக்க முடியாமல் மைதானத்தில் அவதிப்பட்டாலும், மறுபுறத்தில் இலங்கை வீரர்கள் நாடகமாடி நிறுத்துவதற்கு முற்பட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஷேவாக், கங்குலி உள்ளிட்ட வீரர்களும், அந்நாட்டின் ஒருசில ஊடகங்களும் குற்றம் சுமத்தியிருந்தன.

மேலும், மதிய நேர இடைவேளையின்போது ஓய்வறையிலிருந்த இந்திய வீரர்களான ரோஹித் சர்மாவும், குல்தீப் யாதவ்வும் மாஸ்க் மூலம் மூக்கை மூடியிருந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனை அவதானித்த பின்னரே உடற்கூற்று நிபுணரை அனுப்பி இலங்கை வீரர்களுக்கான மாஸ்க் உறைகளை பெற்றுக்கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், போட்டியை இடைநிறுத்துமாறு இலங்கை வீரர்களால் கோரிக்கை முன்வைப்பதற்கு முன்னதாகவே இந்திய அணியின் உதிரி வீரரான குல்தீப் யாதவ், மைதானத்தில் நுழையும்போது மூக்கை மூடிய பாதுகாப்பு உறை அணிந்திருந்தமை இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இதேவேளை, போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்குள் இலங்கை வீரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணை நடத்த வேண்டும் என ஷேவாக் தெரிவித்திருந்தார்.

இதேபோல் இலங்கை வீரர்கள் துடுப்பெடுத்தாடிய போதும் பாதுகாப்பு உறைகளை அணியவில்லை. இந்திய வீரர்களும் சிரமமின்றி களத்தடுப்பில் ஈடுபடுவதை காண முடிந்தது. இதனால் இலங்கை வீரர்களை, ரசிகர்கள் டுவிட்டரில் சாடியுள்ளனர். இது போன்ற நடிப்புக்காக இலங்கை வீரர்களுக்கு ஒஸ்கார் விருது கொடுக்கலாம் என்றும் பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்துள்ளனர்.

அதேசமயம் மைதானத்தை விட்டு வெளியேறியதும் தங்கள் அணியில் மூன்று வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இப்போட்டியில் ஒரு கட்டத்தில் காற்றில் மாசுபாடு உச்சத்தை எட்டியது. வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால் மற்றும் லஹிரு கமகே மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்கள் ஓய்வறை திரும்பியபோது வாந்தி எடுத்தனர். வீரர்கள் அறையில் ஓட்சிசன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பயன்படுத்திய பிறகுதான் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இலங்கை அணி வீரர்களுடன் 5 வைத்தியர்கள் இருந்தனர். அப்போது, போட்டி நடுவர் டேவிட் பூனும் உடனிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதே நிலைமை நீடித்தால் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, அதை போட்டி நடுவரும், கள நடுவரும் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று பதில் அளித்தார்.

இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், ‘விராட் கோஹ்லி கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுமையாக துடுப்பெடுத்தாடியிருந்தார். அவருக்கு எந்த சுவாச உறையும் தேவைப்படவில்லை. சீதோஷ்ண நிலைமை இரு அணிக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால் எங்களது வீரர்களுக்கு இதில் எந்த உடல்நலக்கோளாறும் வரவில்லையேஎன்றார்.

கடந்த 2 வருடங்களாக டெல்லி நகரை ஆக்கிரமித்துள்ள இந்த காற்று மாசடைதலானது அங்கு நடைபெறுகின்ற போட்டிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதில் கடந்த நவம்பர் மாதம் இதே மைதானத்தில் நடைபெறவிருந்த ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் அதிக காற்று மாசு காரணமாக பிற்போடப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி அரை மரதன் போட்டிகளிலும் பங்கேற்ற வீரர்களுக்கு இதன் அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளையும் அங்கு நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.