கால்பந்தை தொடர்ந்து இலங்கை றக்பிக்கும் தடை

94

உலக றக்பி சம்மேளனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை றக்பிக்கு தடை விதித்துள்ளது.

இலங்கையில் றக்பி விளையாட்டியில் அரசியல் அழுத்தம் காரணமாக சர்வதேச ரக்பி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உலக றக்பி சம்மேளனம் இந்த தடையை விதித்துள்ளது.

உலக றக்பி சம்மேளனத்தின் சர்வதேச விவகாரங்களின் தலைவரான டேவிட் கிரிகோரி, இலங்கை றக்பி சம்மேளனத்தின் தற்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹசன் சின்ஹவன்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உலக றக்பி நிர்வாக சபையின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு உலக றக்பி சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலக றக்பி சம்மேளனம், ஆசிய றக்பி சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை றக்பியின் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு உத்தேசித்துள்ளது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இலங்கையின் றக்பி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் ஆசியப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் உலக றக்பி சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக றக்பி சம்மேளனம் மற்றும் ஆசிய றக்பி சம்மேளனத்தின் அதிகாரிகளும் இதற்கான பல கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். மிக விரைவில் அதற்கான ஏற்பாடுகளை உலக றக்பி சம்மேளனம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக இலங்கைக்கு வெளியில் எந்தவொரு றக்பி நடவடிக்கைகளிலும் இலங்கை றக்பி சம்மேளனத்துக்கு பங்கேற்க அனுமதி இல்லை எனவும் குறித்த கடிதம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக தாய்லாந்தின் புக்கே நகரில் கடந்த வருடம் ஏப்ரல் 9ஆம் திகதியன்று நடைபெற்ற ஆசிய றக்பியின் கூட்டத்தின் போது, இலங்கை றக்பியின் அங்கத்துவத்தை ஆசிய றக்பி நிறைவேற்றுக் குழு தற்காலிகமாக இடைநிறுத்தியது. அதனைத் தொடர்ந்து 2022 மே முதலாம் திகதி அந்த தீர்மானத்தை ஆசிய றக்பி நிறைவேற்றுக் குழு ஏகமனதாக அங்கீகரித்து இலங்கை றக்பியின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது.

இந்த நிலையில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதை விளையாட்டுத்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து இலங்கை றக்பி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை கடந்த மாதம் 13ஆம் திகதி நீக்கிய ஆசிய றக்பி, இலங்கை றக்பிக்கு மீண்டும் பூரண உறுப்புரிமை வழங்குவதாக அறிவித்தது.

இதுஇவ்வாறிருக்க, அரசியல் தலையீடுகள் காரணமாக தற்போது இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கும் பிஃபா மூலம் சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<