அஸ்திரேலியாவுடனான T2௦ போட்டிகளிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் வெளியேற்றம்

4881
Angelo Mathews

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட T2௦ தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்குபற்ற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜொகன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது T2 போட்டியில் காயமுற்ற நிலையில், அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடாத்தியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், குறித்த போட்டியின் பின்னர் நாடு திரும்பியிருந்தார்.  

தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் அங்கிருந்து இலங்கை அணி நேரடியாக அவுஸ்திரேலியா செல்லும். அதேநேரம், T2 போட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் சில வீரர்கள் பெப்ரவரி 13ஆம் திகதி கான்பெர்ராவில் இலங்கை அணியுடன் இணைந்து கொள்ளும். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி, பெப்ரவரி 15ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதமர் பதினொருவர் அணியுடனான பயிற்சி போட்டியில் பங்குபற்றவுள்ளது.

அதனை தொடர்ந்து, பெப்ரவரி 17ஆம், 19ஆம், மற்றும் 22ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று T2 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. குறித்த போட்டிகளின் பின்னர் பெப்ரவரி 23ஆம் திகதி இலங்கை அணி நாடு திரும்பும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்பொழுது கிடைக்கபெற்றுள்ள நம்பகரமான செய்திகளின்படி, தென்னாபிரிக்க மண்ணில் இடம்பெறும் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமல் மற்றும் தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோருக்கு குறித்த அவுஸ்திரேலிய அணியுடனான T2 தொடரில் ஓய்வளிக்கப்படலாம்.

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியுடனான குறித்த தொடரில் அணியில் இணைத்துக்கொள்ளப்பட அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதேவேளை, தற்போது ஒருநாள் அணியை வழிநடாத்தும் உபுல் தரங்க அவுஸ்திரேலியாவுடனான தொடரிலும் அணியை வழிநாடாத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறித்த தொடரிற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ குழாம் பெப்ரவரி 7ஆம் திகதி வெளியுடப்படவுள்ளது.