எனது அனுபவம் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் – மாலிங்க

Indian Premier League 2022

1708
Rajasthan Royals
 

வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தனக்கு கிடைத்துள்ள புதிய பொறுப்பு தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் இலங்கை வீரரும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளருமான லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனுபவம் வாய்ந்த சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள், இளம் வீரர்களின் கலவையுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இந்த ஆண்டு IPL தொடரில் நீண்ட தூரம் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இணைந்து கொண்ட பிறகு இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘எங்களிடம் ஒரு சிறந்த வேகப்பந்து அணியொன்று உள்ளது. ட்ரென்ட் போல்ட், கூல்டர் நைல் ஆகிய இருவரும் அனுபவமிக்க வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர். நான் அவர்களுடன் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளேன்.

அதேபோல, பிரசித் கிருஷ்ணா மற்றும் நவ்தீப் சைனி போன்ற இளம் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களும் எங்களிடம் உள்ளனர். அவர்கள் தங்கள் திறமையை மிக உயர்ந்த நிலைக்கு நிரூபித்த வீரர்கள். மேலும், அனுனய் சிங், குல்தீப் சென், குல்தீப் யாதவ் என பல புதுமுகங்களும் அணியில் உள்ளனர். T20 கிரிக்கெட்டில் சரியான இலக்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணிக்கு என்னால் முடியுமானதைக் கொடுத்து அணிக்கு பங்களிப்புச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று அவர் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரான 38 வயதான மாலிங்க, புதிய அணியில் இணைவது குறித்து கருத்து தெரிவித்தார். குறிப்பாக, இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டார்.

‘உண்மையில் பயிற்சியில் ஈடுபடுவதும், இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும் எனக்கு மிகவும் புதியது. இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இதே பொறுப்பில் பணியாற்றியிருந்தேன். தற்போது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு புதிய இடம். இதுவரை என் கதாபாத்திரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுபோன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறந்த அனுபவம்.’

இதனிடையே, IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடிய மாலிங்க, முதல் முறையாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இணைந்ததையும் நினைவு கூர்ந்தார்.

‘உண்மையில் கடந்த ஆண்டுதான் குமார் சங்கக்கார என்னிடம் பயிற்சியாளராக சேர விரும்புகிறீர்களா என்று கேட்டார். ஆனால், கொரோனா மற்றும் உயிரியல் பாதுகாப்பு வலய கட்டுப்பாடுகளால் நான் எனது குடும்பத்திலிருந்து பிரிந்து இருக்க விரும்பவில்லை’ என்று மாலிங்க கூறினார்.

இதனிடையே, ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கான மிக முக்கியமான திட்டம் என்ன என்றும் மாலிங்க இதன்போது தெளிவுபடுத்தினார்.

‘எதிரணியை பகுப்பாய்வு செய்வதிலும், எதிரணி வீரர்களின் பலவீனங்களைப் பார்ப்பதிலும் தான் வேகப் பந்துவீச்சாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எனது அனுபவத்தில் நீங்கள் உங்கள் திறமையில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி, பந்துவீசும்போது எது சிறப்பாக செயல்படுகிறது என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

T20 போட்டிகளில் 24 பந்துகளை வீச வேண்டும். அது நமக்கு நன்மை பயக்கும். ஆனால் உங்கள் உள்ளுணர்வை நம்புவதும் முக்கியம். இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதை அடையாளம் காண வேண்டும்.

ஒரு வலது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் ஒரு இடது கை துடுப்பாட்ட வீரர் மட்டுமே உங்களுக்கு எதிராக தயாராக முடியும். எனவே,

பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும். இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று நினைத்துப் பழக வேண்டும். துடுப்பாட்ட வீரரின் பெயர் என்ன என்பது முக்கியமில்லை’ என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கைக்காக 340 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள லசித் மாலிங்க, 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயல்பட்டு இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முக்கிய பங்காற்றினார்.

எனவே, லசித் மாலிங்க இந்த ஆண்டு IPL தொடரில் குமார் சங்கக்காரவுடன் இணைந்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<