சர்வதேச போட்டிகளை மீள ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

337

எதிர்வரும் டிசம்பர் மாதம் தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க அணியுடன் விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த பெப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி, கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரின் பின்னர் எந்தவொரு சர்வதேச தொடர்களிலும் ஆடியிருக்கவில்லை. கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலினால் இலங்கை விளையாடவிருந்த பல்வேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், இம்மாத இறுதியில் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் மூலம் இலங்கை கிரிக்கெட் போட்டிகளை மீள ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதுவும் நடைபெற்றிருக்கவில்லை. ஆனால், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை, தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த டெஸ்ட் தொடர், டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என குறிப்பிடப்படுகின்ற போதும் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானம் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் இன்னும் அறிவிப்புக்கள் எதுவும் வெளிவரவில்லை. 

இதேநேரம், தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தமது நாட்டுக்கு வரும் இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<