ஊதிய குறைப்பை ஏற்றுக்கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்கள்!

129

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், அடுத்த 12 மாதங்களுக்கு தங்களுடைய ஊதியத்தில் 15 சதவீதத்தை குறைத்துக்கொள்வதற்கான கிரிக்கெட் சபையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

உலகளாவீய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உள்ளிட்ட அனைத்து, கிரிக்கெட் சபைகளின் பொருளாதாரமும் பின்னடைவுக்கு முகங்கொடுத்து வருகின்றது. 

ஜிம்பாப்வே அணியின் இரண்டு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்று

இந்தநிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமையம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை என்பன மேற்கொண்ட உடன்பாட்டுக்கு அமைய வீரர்களின் ஊதியத்தில் 15 சதவீத குறைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிடுகையில், “இங்கிலாந்து வீரர்கள் அமையம் மற்றும் வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது வீரர்கள் அமையம், வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபைக்கு இடையில் பலமான உறவு உள்ளது.  ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள வீரர்களிடமிருந்து அதனை புரிந்துக்கொள்ள முடிகிறது. இதுபோன்ற கடினமான காலப்பகுதியில் வீரர்களின் பொறுப்பை உணர முடிகின்றது” என்றார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமையத்தின் தலைவர் ரிச்சர்ட் பெவன் இதுதொடர்பில் கூறுகையில், “பரந்த அளவில் இருக்கும் கிரிக்கெட்டின் மீதுள்ள பொறுப்பின் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இந்த ஊதிய முறைமையினை நாம் ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

Video: “அதிக விமர்சனங்களுக்கு முகங்கொடுப்பவர்கள் தேர்வளார்கள் மாத்திரமே” – பிரெண்டன் குருப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் சபை கொவிட்-19 வைரஸ் காரணமாக கிரிக்கெட் சபையை சார்ந்து தொழில் புரிந்த 62 பேரை அவர்களுடைய பணிகளிலிருந்து நீக்கியிருந்தது. 

அதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த ஆண்டு 100 மில்லியன் பவுண்ட்டுகளை இழந்துள்ளதுடன், அடுத்த ஆண்டு 200 மில்லியன் பவுண்டுகளை இழக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<