இலங்கையை இலகுவாக வீழ்த்திய நேபாளம் இறுதிப் போட்டிக்கு தெரிவு

SAFF Under 17 Championship 2022

191

இலங்கை அணியை 6 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்ட நேபாளம் வீரர்கள் தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

எனவே, இந்த தொடரின் இறுதிப் போட்டியில் நேபாளம் வீரர்கள் இந்திய அணியை எதிர்வரும் புதன்கிழமை (14) எதிர்கொள்ளவுள்ளனர்.

இலங்கை எதிர் நேபாளம்

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த குழுநிலை போட்டிகளின் நிறைவில் குழு Aயில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை வீரர்கள் குழு Bயில் முதலாம் இடம் பெற்ற நேபாளம் வீரர்களை கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் திங்கட்கிழமை (12) இரவு இடம்பெற்ற இந்த அரையிறுதியில் சந்தித்தனர்.

ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்களில் நேபாளம் வீரர்கள் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களை இலங்கை வீரர்கள் தடுத்தாடும் முயற்சிகளையே மேற்கொண்டனர்.

எனினும், 20ஆவது நிமிடத்தில் நேபாளம் முன்கள வீரர் சுபாஷ் பாமை இலங்கை கோல் காப்பாளர் றிஹாஸ் தனது எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைப் பெற்ற நேபாள் அணித் தலைவர் பிரஷான்த் லக்சம் பந்தை கோலின் இடது பக்கத்தினால் கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

அடுத்த 3 நிமிடங்களுக்குள் இலங்கை அணியின் கோல் எல்லையின் ஒரு திசையில் இருந்து உள்வந்த பந்தை ஹரிஷ் ராஜ் அழகிய முறையில் வேகமாக கோலுக்குள் உதைந்து அடுத்த கோலைப் பெற்றார்.

தொடர்ந்தும் இலங்கை அணியின் எல்லையில் அடுத்தடுத்து சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நேபாளம் அணியினர் 30ஆம் மற்றும் 38ஆம் நிமிடங்களில் முறையே சுபாஷ் பாம் மற்றும் நிராஜ் கார்கி ஆகியோர் மூலம் மேலும் இரண்டு கோல்களைப் பெற்றனர்.

முதல் பாதியில் இலங்கை அணி பெற்ற ஒரே வாய்ப்பாக, 40 நிமிடங்கள் கடந்த நிலையில் முன்கள வீரர் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

எனவே முதல் பாதியில் 20 நிமிட இடைவெளியில் நேபாள் வீரர்கள் பெற்ற கோல்களினால் முதல் பாதியில் 4-0 என அவ்வணி முன்னிலை பெற்றது.

முதல் பாதி: நேபாளம் 4 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் நேபாள் வீரர் இலங்கை அணியின் எல்லையில் வலது புறத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை உனெஷ் புடாதொகி கோலாக்கினார்.

அதன் பின்னர் நீண்ட நேரம் கோல் பெறப்படாத நிலையில் போட்டியின் 90ஆவது நிமிடத்தில் சிஜால் ராய் ஆறாவது கோலையும் பெற, நேபாளம் அணி அரையிறுதியில் 6 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே, சொந்த மைதான அணியினருக்கு எதிரான இரண்டாவது அரையிறுதியை வெற்றி கொண்ட நேபாளம் வீரர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

முழு நேரம்: நேபாளம் 6 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

நேபாளம் – பிரஷான்த் லக்சம் 20’, ஹரிஷ் ராஜ் 23’, சுபாஷ் பாம் 30’, நிராஜ் கார்கி 38’, உனெஷ் புடாதொகி 51’, சிஜால் ராய் 90’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

இலங்கை – மொஹமட் பாதிஹ் 49’, மொஹமட் முபாஸ் 89’

நேபாளம் – அஷ்வின் கொரசைனி 83’

இந்தியா எதிர் பங்களாதேஷ்

குழுநிலை போட்டிகளின் நிறைவில் குழு Aயில் முதலிடம் பெற்ற பங்களாதேஷ் அணி, குழு Bயில் இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணியை அதே மைதானத்தில் திங்கட்கிழமை முதல் ஆட்டமாக மாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் சந்தித்தது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம அளவில் மோத கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.

எனினும், இந்திய முன்கள வீரர் தங்லால்சுன் கங்டே இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்கள் கடந்த நிலையில் முதல் கோலையும், 59ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

பதிலுக்கு போட்டியின் 62ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் மிராஜுல் இஸ்லாம் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். எஞ்சிய நிமிடங்களில் இரு அணிகளும் மேலதிக கோலுக்காக போராடிய போதும் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.

எனவே, போட்டியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட இந்திய அணி முதல் அணியாக SAFF 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<