கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட்: பார்வையாளர்களுக்கு அனுமதி!

Sri Lanka tour of India 2022

127
virat kohli

மொஹாலியில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்த விசேட அனுமதியை வழங்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நாளை மறுதினம் (04) ஆரம்பமாகவுள்ளது.

ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தில் இந்திய அணி ஆடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பதுடன், இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

எனினும், பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேவேளையில், மற்ற இடங்களில் அனுமதிக்கப்படும்போது, மொஹாலியில் மட்டும் ஏன் ரசிகர்களுக்கு அனுமதிக்கக் கூடாது என விமர்சனமும் எழும்பியது.

இந்த நிலையில், கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட் போட்டியை நேரில் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதுபற்றி ANI செய்தி நிறுவனத்திடம் அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறாது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது குறித்த முடிவை மாநில கிரிக்கெட் சங்கங்கள் எடுக்கும். தற்போதைய சூழல்களில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படுகிறது.

பஞ்சாப் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் நான் பேசினேன். 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லியின் வரலாற்றுமிக்கத் தருணத்தைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்” என்றார்.

ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் உட்பட பலர் விராட் கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற விராட் கோஹ்லி, இதுவரை 99 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7962 ஓட்டங்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்துள்ள அவர், கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திணறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<