SAFF சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வருவதே இலங்கையின் இலக்கு – அருன சம்பத்

SAFF Under 17 Championship 2022

154

எமது சொந்த நாட்டில் இடம்பெறும் தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு வருவதே இலங்கை அணியின் பிரதான இலக்கு என்று அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அருன சம்பத் தெரிவித்துள்ளார்.

SAFF 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் திங்கட்கிழமை (5) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், குறித்த தொடருக்கு முன்னரான ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் தொடரில் பங்கேற்கும் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கை அணிகளின் பயிற்றுவிப்பாளர்களும் அணித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அணியின் தயார்நிலை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அருன சம்பத், தனது அணி குறுகிய காலம் பயிற்சிகளை மேற்கொண்டாலும் இந்த தொடருக்கு பூரண தயார்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

”நான் இந்த அணிக்கு ஒரு மாதம் அளவிலேயே பயிற்சிகளை வழங்கி வருகின்றேன். எனினும், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வீரர்களைத் தெரிவு செய்தமையினால் எனக்கு சிறந்த ஒரு குழாத்தை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது.

நாட்டில் நிலவிய கொவிட் அச்சுறுத்தல் மற்றும் எரிபொருள் நெருக்கடி எமது தயார்படுத்தல்களுக்கு சவாலாக இருந்தது. எனினும், திறமையான வீரர்களைக் கொண்ட எனது குழாம் தற்போது தொடருக்கு முழுமையாக தயாராக உள்ளது” என்றார்.

இந்த தொடரை நடாத்தும் வரவேற்பு நாடான இலங்கை அணியின் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த அருன சம்பத் ”எனக்கு இந்த அணியை பொறுப்பெடுக்குமாறு கேட்டுக்கொண்டபோது இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் என்னிடம் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

எனவே, அவரது வேண்டுகோளை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நாம் அணியாக சிறப்பாக செயற்பட்டு இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வோம். அதுவே எமது இலக்காகும்” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஏனைய அணிகளான இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் பயிற்றுவிப்பாளர்கள் இந்த தொடரில் சம்பியன் கிண்ணத்தை வெல்வதே தமது இலக்கு எனத் தெரிவித்தனர்.

தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (5) முதல் போட்டியில் இந்திய அணி பூட்டானை எதிர்கொள்ளவுள்ளதுடன், இரவு இடம்பெறும் அடுத்த போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<