சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும்வரை பயிற்சிகளை தொடரவுள்ள இலங்கை

153

சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும் வரையில், தற்போது மேற்கொள்ளும் பயிற்சிகளை தொடரவுள்ளதாக இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. அத்துடன், அணியின் பயிற்சிகளும் தடைப்பட்டிருந்தது. எனினும், தற்போது கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

லங்கன் ப்ரீமியர் லீக்கிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்!

அதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேகப் பந்துவீச்சாளர்களை மாத்திரம் கொண்டு பயிற்சிகளை ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் உட்பட 24 வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் பயிற்சிகளை தொடந்து இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். 

“முதலாவது பயிற்சியின் போது அதிக விடயங்களை பெற்றுக்கொண்டோம்.  இந்த பயிற்சி முகாமில் அதிக வீரர்களை இணைத்துக்கொண்டதற்கான காரணம், சர்வதேச போட்டிகள் எமக்கு கிடைக்கும் வரை இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது பயிற்சி முகாமினை ஆரம்பிப்பதற்கும் இதுதான் காரணம்.

அத்துடன், கடந்த மூன்று மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடாமல் இருந்து, இப்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதால், ஏற்கனவே இருந்த 100 சதவீதத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான், இப்போதே பயிற்சிகளை ஆரம்பித்துள்ளோம். அதேநேரம், இந்த பயிற்சிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் இந்த பயிற்சிகளுடன் நிறுத்தாமல், இதற்கு அடுத்தப்படியாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். எனவே, சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும் வரை நாம் இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

இலங்கை அணி விளையாடவிருந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான சுற்றுத் தொடர்கள் தற்போதைய நிலையில், பிற்போடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை லங்கன் ப்ரீமியர் லீக்கினை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<