ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

157

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.  

மழைக்கு மத்தியில் மைதானத்தில் நீர் நிரம்பிய நிலையில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் இன்று (15) இரவு நடைபெற்ற இந்தப் போட்டி இரு அணி வீரர்களுக்கும் கடுமையாக இருந்ததோடு குறிப்பாக லெபனான் வீரர்கள் தமது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த போராடினர். 

தென் கொரியாவிடம் 8 கோல்களுடன் தப்பித்த இலங்கை அணி

தென் கொரியாவின் ஹ்வாசியோங்கில்…………

எனினும் மோசமான காலநிலை மற்றும் ஆடுகளத்திலும் லெபனான் வீரர்கள் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஹசன் மதூக் முன்னிலையில் இருந்து இலங்கை கோல் எல்லைக்குள் பந்தை கடத்தி வந்தபோதும் லெபனானின் கோல் முயற்சியை சுஜான் பெரேரா தடுத்தார். 

லெபனான் அணியின் மத்திய களத்தில் அத்னன் ஹைதருடன் நாதர் மடர் ஆதிக்கம் செலுத்த போட்டியின் நீண்ட நேரம் இலங்கை வீரர்கள் தமது பக்கம் இருந்து முன்னோக்கி நகரவில்லை. 

15ஆவது நிமிடத்தில் ஹர்ஷ பெர்னாண்டோ பெனால்டி பெட்டிக்குள் ரபிஷ் அதாயாவின் மீது கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த பஹ்ரைன் போட்டி மத்தியஸ்தர் லெபனானுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். அதனைக் கொண்டு ஹசன் மாதுக் கோல் புகுத்தினார்.    

இந்நிலையில் இலங்கை அணி பயிற்சியாளர் நிசாம் பகீர் அலி 25 ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட்டுக்கு பதில் சசங்க டில்ஹாரவை அனுப்பினார். கவிந்து இஷானுக்கு பதிலாகவே ஜூட் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவர் தென் கொரியாவுக்கு எதிரான குழாத்தில் இடம்பெறாத நிலையிலேயே இந்தப் போட்டியில் முதல் பதினொரு வீரர்களில் இணைக்கப்பட்டார்.  

மிக அரிதாக இலங்கை வீரர்கள் தமது பாதியை கடந்து லெபனான் பக்கமாக முன்னேறிச் சென்றபோதும் அது ஓப் சைட்டாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. மத்திய களத்தில் அரணாக செயற்பட்ட பெலிக்ஸ் மெல்கி தம்மைக் கடந்து முன்னேறுவதை தடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே சலன சமீர பெனால்டி பகுதியில் லெபனான் வீரர் ரபீஹ் அதாயாவை கீழே வீழ்த்த 37 ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு மற்றொரு ஸ்பொட் கிக் கிடைத்தது. ஹிலால் அல்ஹெல்வே அதனை கோலாக மாற்ற லெபனான் அணி 2 கோல்களால் முன்னிலை பெற்றது. 

முதல் பாதி: இலங்கை 0 – 2 லெபனான்

முதல் பாதியை விடவும் இலங்கை அணி இரண்டாவது பாதியை சற்று சிறப்பாக ஆரம்பித்தது. எனினும் சுஜான் பெரேரா காயமுற்றது இலங்கை அணிக்கு இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் கவலையை ஏற்படுத்தியபோதும் அவர் அந்த காயத்தில் இருந்து மீண்டார்.    

இலங்கையின் தாக்குதல் ஆட்டம் ஒருங்கிணைப்பு இன்றி இருந்ததோடு அணியின் பந்து பரிமாற்றமும் இலக்கு இன்றி இருந்ததால் எதிரணிக்கு சவால் கொடுக்க முடியவில்லை. 

700 கோல்களை தொட்டார் ரொனால்டோ

உக்ரைனுக்கு எதிரான 2020 யூரோ……………..

லெபனான் வீரர்கள் சிறப்பாக ஆடியபோது சுஜான் பெரேரா எதிரணியின் ஒருசில கோல் முயற்சிகளை தடுத்தது இலங்கை அணிக்கு ஆறுதலை ஏற்படுத்துவதாக இருந்தது.  

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே 59 ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகிப்புக்கு பதிலாக திலிப் பீரிஸ் மாற்றப்பட்டார். மாற்று வீரர் களமிறங்கிய விரைவிலேயே அமான் பைசர் காயத்தால் வெளியேற இறுதி மாற்று வீரராக சுந்தராஜ் நிரேஷ் களமிறங்கினார்.  

இலங்கை அணி போட்டியின் 65 ஆவது நிமிடத்திலேயே இலக்கை நோக்கி முதல் முறை பந்தை உதைத்தது. அதுவும் நீண்ட தொலையில் இருந்து உதைக்கப்பட்ட அந்தப் பந்தை லெபனான் கோல் காப்பாளர் இலகுவாக தடுத்தார். ஹசன் மாதுக் மற்றும் ரபிஹ் அதாய் ஆகியோரால் லெபனானின் கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருந்தது. எனினும் பந்து கோல் கம்பத்தில் இருந்து வெளியேற அவர்களின் முயற்சி தவறியது. 

இந்நிலையில் ஹிலால் அல்ஹெல்வே அபார கோல் ஒன்றை பெற்று லெபான் அணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தினார்.      

இலங்கை அணி இந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. வெளிநாட்டில் 3 போட்டிகள் உட்பட இலங்கை அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன. 

முழு நேரம்: இலங்கை 0 – 3 லெபனான்

கோல் பெற்றவர்கள் 

லெபனான்: ஹசன் மாதுக் 15’, ஹிலால் அல்ஹெல்வே 38’ & 81’

மஞ்சள் அட்டைகள்

இலங்கை – டிக்சன் புஸ்லஸ் 26’, ஹர்ஷ பெர்னாண்டோ 45’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<