இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

1377
PA Images via Getty Images
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் கொவிட்-19 வைரஸிற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் விதத்தில் இலங்கை அணியின் வீரர்கள் நடந்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் போன்ற உயர்தரமான விளையாட்டு ஒன்றுக்கு மிகப் பெரிய ஆபத்து விளைவிக்க கூடிய ஒரு செயலாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்ட குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, குணத்திலக்க

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே தாம் முதலாவதாக விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை 3-0 என மிகவும் மோசமாக பறிகொடுத்திருந்தது. 

T20 தொடரினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாவிருக்கின்றது. 

இந்த ஒருநாள் தொடர் டர்ஹமில் ஆரம்பமாகவுள்ள சந்தர்ப்பத்தில் இந்த ஒருநாள் தொடருக்காக டர்ஹம் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய மூன்று பேரும் கொவிட்-19 வைரஸ் பரவல் அச்சம் அதிகம் கொண்ட டர்ஹம் பிராந்தியத்தின் வீதிகளில் எந்தவித முகக் கவசங்களுமின்றி ஊர் சுற்றுவதனை வீடியோ காணொளிகளில் அவதானிக்க முடியுமாக இருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் இந்த நடத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருக்கும் உயிரியல் பாதுகாப்பு வலயத்தினை மீறும் செயலாக கருதப்பட்டதுடன், குறித்த வீரர்கள் மூவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டு இலங்கை வரவழைக்கப்பட்டு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. 

இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19

அதேநேரம், குறித்த வீரர்கள் கொவிட்-19 வைரஸிற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பது அணியின் ஏனைய வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்கள் என அனைவருக்கும் ஆபத்தினை உருவாக்கும் விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த வீரர்களின் நடத்தை தொடர்பில் பேசியிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

அவர்களிடம் இருந்து இவ்வாறான விடயம் ஒன்று வெளியானது பெரிதும் ஏமாற்றத்தினை தருகின்றது. அதேநேரம், அவர்கள் சிறந்தவீரர்கள் என்பதும் துரதிஷ்டவசமான ஒரு விடயம். எனினும், நாம் சில விடயங்களில் இரட்டைக்கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், சின்ன விடயங்கள் அனைத்தினையும் தரைமட்டமாக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.” 

அதேநேரம், மார்க் வூட் இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் தமக்கு வழங்கியிருந்த விதிமுறைகளை தமது அணி சரியாக அவதானித்து பின்பற்றுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

டர்ஹமில் கொவிட் (வைரஸின் பாதிப்பு) அதிகமாக இருப்பதாக எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, நாங்கள் பின்வாங்கியிருக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். எங்களுக்கு உணவகங்களுக்கோ, Coffee கடைகளுக்கோ அல்லது அது போன்ற வேறு இடங்களுக்கோ செல்லும் வாய்ப்பு தரப்பட்டிருக்கவில்லை. உண்மையினைச் சொல்லப்போனால் வெளியில் போய் இருப்பது போன்ற விடயங்களுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கவில்லை. எனவே, நாம் அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டோம்.” 

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத விடயம் குறித்து பேசியிருந்த மார்க் வூட் ஏற்கனவே பெற்ற தொடர் தோல்விகளினை தவிர்ப்பதற்கு இலங்கை அணி கடுமையான போட்டித்தன்மையினை வெளிப்படுத்த எதிர்பார்க்கும் என கருதப்படுவதால் தாம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் அவதானமாக இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார். 

அவர்கள் அண்மையில் அதாவது 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் எம்மை தோற்கடித்திருந்தனர். குறித்த போட்டியில் நாமே வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நாம் தோற்றுப்போனோம். எனவே, நாம் இங்கே விட்டுக்கொடுக்க முடியாது. அவர்கள் மூன்று போட்டிகளில் ஏற்கனவே தோற்றுவிட்டனர் எனவே அதனை சரி செய்து போட்டித்தன்மையாக இருக்க அவர்கள் முயற்சி செய்வார்கள். எனவே, அவ்வாறான விடயம் ஒன்றினை நான் எனது சொந்த மைதானத்தில் நடைபெறாமல் ஆக்குவதற்கு நான் முயல்வேன்.”

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (29) செஸ்டர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இன்று பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…