டெஸ்ட் போட்டிகளின் தரத்தை உயர்த்த சச்சின் கூறும் ஆலோசனை!

130

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸ் ஒன்றின் ஒவ்வொரு 45-50 அல்லது 55 பந்து ஓவர்களுக்கும் இடையில் புதிய பந்து வழங்கினால், டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.  

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ப்ரெட் லீயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சச்சின் டெண்டுல்கர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். 

ஐசிசி அறிமுகப்படுத்திள்ள புதிய விதிமுறைகள்!

அனில் கும்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழு, கொவிட்-19 வைரஸிலிருந்து பாதுகாக்கும் முகமாக கிரிக்கெட்டுக்கு புதிய ஆலோசனைகளை முன்வைத்திருந்த நிலையில், அதனை நேற்றைய தினம் ஐசிசி விதிமுறைகளாக அறிவித்துள்ளது. 

இந்தநிலையில், பந்தின் மீது உமிழ்நீர் இடுவதை தடைசெய்யும் முறைமையானது, டெஸ்ட் கிரிக்கெட்டை பகலிரவு ஒருநாள் போட்டிக்கு இணையானதாக மாற்றும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட சச்சின், 

“டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது, பந்தின் மீது உமிழ்நீர் இடாவிட்டால், பந்தினை தமக்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்களால் பளிச்சிட செய்ய முடியாது. குறிப்பாக விளையாடும் காலநிலைக்கு ஏற்ப அதிக சவாலை ஏற்படுத்தக்கூடிய விடயமாக இந்த தடை மாறிவிடும். அதேநேரம், டெஸ்ட் போட்டிகள் பகலிரவு ஒருநாள் போட்டிகள் போன்றாகிவிடும்.

பகலிரவு ஒருநாள் போட்டிகளின் போது முதலில் பந்துவீசினால், பந்து காய்ந்த நிலையில் இருக்கும். ஆனால், இரண்டாவதாக பந்துவீசும் போது, இரவில் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆனால், பந்துவீச்சாளர்களுக்கான விதிமுறைகள் எப்போதும் ஒன்றுதான்.  எனினும், களத்தில் விளையாடும் தன்மை வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

இதேவேளை பந்தின் மீது உமிழ்நீர் இடுவதற்கான தடை குறித்து ப்ரெட் லீ குறிப்பிடுகையில், “உமிழ்நீர் தடைக்கு பதிலாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொருளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் என அனைவரும் புதியதொரு பொருள் ஒன்றை ஏற்றுக்கொண்டால், அதுவொரு நல்ல முடிவாக இருக்கும். என்னை பொருத்தளவில் வெக்ஸினை பயன்படுத்துவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

அதேநேரம், பந்தின் மீது உமிழ்நீர் இடப்படுமாயின் 2 அல்லது மூன்று எச்சரிக்கைகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் குறித்த விடத்தை செய்யமாட்டேன் என கூறலாம். வீரர்கள் அதனை செய்வதற்கு விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பழக்கத்தில் உள்ள செயற்பாடு என்பதால், அவர்களை அறியாமல் அதனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளனஎன ப்ரெட் லீ மேலும் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஒருநாள் போட்டிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. அதேபோன்று, டெஸ்ட் போட்டியிலும் மாற்றம் ஒன்றினை கொண்டுவர வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.  அதற்காக டெஸ்ட் போட்டிகளில் 45-50 அல்லது 55 ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தினை வழங்கும் முறை வேண்டும் என டெண்டுல்கர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“டெஸ்ட் போட்டிகளில் வேகமாக ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும். அது நல்ல விடயம் அல்ல. நான் நினைக்கிறேன் விளையாடும் தரம் தற்போது குறைந்துள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் எந்தவொரு முட்டாள் தனமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாத பட்சத்தில் ஆட்டமிழக்க முடியாது என்பதை அறிந்துள்ளனர் என்பதுடன், இப்போதுள்ள ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு நாம் ஏன் 45-50 அல்லது 55 ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தினை வழங்கக்கூடாது. ஒருநாள் போட்டிகளில் 50 ஓவர்கள் மாத்திரமே விளையாடுகிறோம். எனவே, 2 புதிய பந்துகளால் பந்துவீச்சாளர்களுக்கு 25 ஓவர்கள் வரை கிடைக்கின்றது. எனவே, இதனை செய்ய முடியும்” என சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<