U17 ஆசியக்கிண்ண தகுதிச் சுற்றுக்கான குழு Jயில் இலங்கை

Sri Lanka Football & Sri Lanka Volleyball

149

பஹ்ரைனில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள AFC 17 வயதின் கீழ் ஆசிய கிண்ண தகுதிச் சுற்றுக்கான தகுதிபெறும் அணிகளுக்கான குழு வடிவம் கோலாலம்பூரில் நடைபெற்ற வரைவில் இறுதி செய்யப்பட்டது.

மொத்தமாக 44 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில், 10 மையப்படுத்தப்பட்ட தகுதிக்குழுக்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு குழுக்கள் நான்கு அணிகளைக் கொண்டிருக்கும் என்பதுடன் ஏனைய நான்கு குழுக்களில் 5 அணிகளை கொண்டிருக்கும். இந்த தகுதிச்சுற்று போட்டிகளானது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 9ம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> 20 வயதின்கீழ் ஆசியக் கிண்ண தகுதிகாண் கால்பந்து தொடரில் இலங்கைக்கு சவால்

இதில் இலங்கை அணியானது J  குழுவில் இடம்பிடித்துள்ளதுடன், இந்த குழுவில்  உஸ்பெகிஸ்தான், கொரியா குடியரசு மற்றும் புருனே தாருஸ்ஸலாம் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

அதேநேரம் நடப்பு சம்பியன் மற்றும் மூன்று தடவைகள் கிண்ணத்தை வென்ற ஜப்பான் அணி A குழுவில் இடம்பிடித்துள்ளதுடன், இந்த குழுவில் ஜோர்தான், சிரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகள் இடம்பிடித்துள்ளன.

B குழுவில் இந்தோனேசியா, மலேசியா, பாலஸ்தீனம், குவாம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், C குழுவில் ஓமான், கட்டார், ஈராக், லெபனான் மற்றும் பஹ்ரைன் அணிகளும் இடத்தை பிடித்துள்ளன. இதில், பஹ்ரைன் அணி தொடரை நடத்துவதால் ஏற்கனவே தகுதிபெற்றுள்ளதுடன், தகுதிச்சுற்று அவர்களுக்கான இடத்தை நிர்ணயிக்காது. அதேநேரம், D குழுவை பொருத்தவரை இரண்டு தடவைகள் சம்பியனாகியுள்ள சவுதி அரேபியா அணியுடன் இந்தியா, மியன்மார், மாலைத்தீவுகள் மற்றும் குவைத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குழு Eயில் ஏமன், பங்களாதேஷ், சிங்கபூர் மற்றும் பூட்டான் அணிகள் உள்ளதுடன் குழு Fஇல் வியட்நாம், தாய்லாந்து, சீன தைபே மற்றும் நேபாளம் அணிகள் இடம்பிடித்துள்ளன.

இரண்டு தடவைகள் (1994, 2004) கிண்ணத்தை வென்றுள்ள கம்போடியா, சீனா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் மூன்று தடவைகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் குழு Gயில் இடம் வகிப்பதுடன், குழு Hஇல் தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திமோர்-லெஸ்டே மற்றும் மங்கோலியா அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குழு Iயை பொருத்தவரை ஈரான், ஹொங் கொங், கிர்கிஸ் குடியரசு,  லாவோஸ் அணிகள் தங்களுடைய இடத்தை தக்கவைத்துள்ளன.

இதேவேளை, குறிப்பிட்ட இந்த தொடரில் குழுநிலைகளில் முதலிடங்களை பிடிக்கும் 10 அணிகள் மற்றும் சிறந்த பெறுபேற்றில் இரண்டாவது இடங்களை பிடிக்கும் 5 அணிகள் பஹ்ரைனில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழு விபரம் (போட்டியை நடத்தும் நாடு = H)

  • குழு A – ஜப்பான், ஜோர்தான் (H), பிலிப்பைன்ஸ், துர்க்மெனிஸ்தான்
  • குழு B – இந்தோனேசியா (H), மலேசியா, பாலஸ்தீனம், குவாம், ஐக்கிய அரபு இராச்சியம்
  • குழு C – ஓமான் (H), ஈராக், லெபனான், பஹ்ரைன், கட்டார்
  • குழு D – இந்தியா, சவுதி அரேபியா (H), மியன்மார், மாலைத்தீவுகள், குவைத்
  • குழு E – ஏமன், பங்களாதேஷ் (H), சிங்கபூர், பூட்டான்
  • குழு F – தாய்லாந்து, வியட்நாம் (H), சீன தைபே, நேபாளம்
  • குழு G – அவுஸ்திரேலியா (H), சீனா, கம்போடியா, N. மரியானா தீவுகள்
  • குழு H – தஜிகிஸ்தான் (H), ஆப்கானிஸ்தான், திமோர்-லெஸ்டே, மங்கோலியா
  • குழு I – ஈரான், ஹொங் கொங், கிர்கிஸ் குடியரசு (H), லாவோஸ்
  • குழு J – கொரிய குடியரசு, புருனே தாருஸ்ஸலாம், உஸ்பெகிஸ்தான் (H), இலங்கை

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<