ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் யாழ். மகாஜனாவின் கேதுஷன், ஐங்கரனுக்கு முதல் தங்கம்

131

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 89 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 2 தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.  

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 89 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (10) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்………

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 9 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1700 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் நிகழ்த்தப்பட்ட 4 போட்டிச் சாதனைகளும், இரண்டாவது நாளான இன்று (11) 5 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இந்த நிலையில், கோலூன்றிப் பாய்தலில் வழமைபோல் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, இதுவரை 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வெற்றி கொண்டது.

போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (11) காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்கு கொண்ட கதிர்காமலிங்கம் கேதுஷன் 3.90 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். 

கடந்த வருடமும் இதே போட்டிப் பிரிவில் பங்குகொண்டு 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தினை வென்ற கேதுஷனுக்கு, அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளின் போது ஏற்பட்ட உபாதையினால் முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், போட்டியின் பிறகு எமது இணையத்தளத்திற்கு கேதுஷன் வழங்கிய செவ்வியில், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றி வெற்றியீட்டினேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

கடந்த வாரம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளிலும் நான் பங்குபற்றியிருந்தேன். எனினும், துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகினேன். 

தற்போது குணமடைந்து இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பங்குபற்றி முதலிடத்தைப்  பெற்றுக் கொண்டேன். இதற்காக எனக்கு உதவிய சுபாஸ்கரன் மற்றும் தினூஷன் பயிற்சியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

இதேநேரம், குறித்த போட்டியில் 3.50 மீற்றர் உயரத்தைத் தாவிய காலி மஹிந்த கல்லூரியின் அச்சின்த கவிஷான் வெள்ளிப் பதக்கத்தினையும், இரத்தினபுரி கன்கந்த மத்திய கல்லூரியின் சி.எம் நிப்ரான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இது இவ்வாறிருக்க, இன்று மாலை (11) நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான ஐங்கரன் லக்ன் மற்றும் செல்வேந்திரன் தேனுஷன் ஆகியோர் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். 

இதில் ஐ. டிலக்ன் 3.20 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, செ. தேனுஷன் (2.60 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இவ்விரண்டு வீரர்களும் முதல் முறையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<