பிரேவிஷின் அதிரடியுடன் இலங்கையை வீழ்த்திய தென்னாபிரிக்க A அணி

South Africa A tour of Sri Lanka 2023

2469

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை A  அணிக்கு எதிரான முதல் உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் டெவால்ட் பிரேவிஷின் அதிரடி ஆட்டத்துடன் தென்னாபிரிக்க A அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை A அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>>ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி<<

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிசான் மதுஷ்க 68 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை கொடுத்த போதும், லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ மற்றும் நிபுன் தனன்ஜய ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.

எனினும் மத்தியவரிசையில் சஹான் ஆராச்சிகே (20 ஓட்டங்கள்), அஷேன் பண்டார (41 ஓட்டங்கள்) ஆகியோர் சற்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜனித் லியனகே இறுதிவரை ஆட்டமிழக்காமல் அபாரமாக ஆடினார். இவர் 79 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை இலங்கை A அணி பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுதோ சிபம்லா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க A அணி 5 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. எவ்வாறாயினும்  டொனி  டி ஷொர்ஷி (35 ஓட்டங்கள்) மற்றும் கீகன் பீட்டர்சன் (45 ஓட்டங்கள்) ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இவர்களுடைய இணைப்பாட்டத்தை தொடர்ந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க A அணி் தடுமாறியது. எனினும் இதன் பின்னர் களமிறங்கிய டெவால்ட் பிரேவிஷ் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்த்து அதிரடியாக ஆடினார்.

>>WATCH – ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்வதில் இலங்கைக்கு சிக்கலா?<<

இவர் வெறும் 71 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும், பெயார்ஸ் ஸ்வானெபோல் 28  பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள தென்னாபிரிக்க அணி 41.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Photos – South Africa ‘A’ tour to Sri Lanka 2023 – 1st Unofficial ODI

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க A அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<