ஹொக்கி ஆசிய கிண்ண வாய்ப்பை இழந்த இலங்கை

190
Sri Lanka fail to qualify for 2022 Asia Cup

ஆடவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிய சம்மேளன ஹொக்கி (AHF) தொடரின் அரையிறுதிப் போட்டியில், இலங்கை ஓமானிடம் தோல்வியடைந்துள்ளது.

அத்துடன் இந்த தோல்வி, இலங்கை ஆடவர் ஹொக்கி அணிக்கு 2022ஆம் ஆண்டிற்கான ஹொக்கி ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பினையும் இல்லாமல் செய்திருக்கின்றது.

>> பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட அணிகள்!

இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் இன்று (19) ஆசிய சம்மேளன ஹொக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் இலங்கை முதல் அரையிறுதியில் ஓமானை எதிர்கொள்ள மற்றைய அரையிறுதியில் பங்களாதேஷ் கஷகஸ்தானை எதிர்கொண்டிருந்தது.

இந்த அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கே 2022ஆம் ஆண்டிற்கான ஹொக்கி ஆசியக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, இலங்கை ஓமானிடம் தோல்வியை தழுவி ஆசியக் கிண்ண வாய்ப்பினை இழந்திருக்கின்றது.

இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஓமான் 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மற்றைய அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ், கஷகஸ்தானை 8-1 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, ஆசிய சம்மேளன கிண்ண ஹொக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு ஓமானுடன் சேர்ந்து தெரிவாகும் இரண்டாவது அணியாக மாறியது.

மறுமுனையில் பங்களாதேஷ், ஓமான் அணிகள் அடங்கலாக இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்கெடுக்கும் 2022ஆம் ஆண்டுக்கான ஹொக்கி ஆசியக் கிண்ணத் தொடர், மே மாதம் 23ஆம் திகதி ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<