பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட அணிகள்!

Asian Qualifier Beach Volleyball Tournaments for Commonwealth Games 2022

155

பேர்மிங்கமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான ஆசிய குவாலிபையர் கடற்கரை கரப்பந்தாட்ட தொடரில், இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றியை பதிவுசெய்துள்ளன.

நீர்கொழும்பு கடற்கரை கரப்பந்தாட்ட அரங்கில் நேற்று (18) மற்றும் இன்றைய தினம் (19) நடைபெற்ற போட்டிகளில், அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளன.

>>மாலைதீவின் ‘Sports Icon’ விருதை வென்ற சனத், தர்ஜினி

அஷான் ரஷ்மிக மற்றும் மலிந்த யாப்பா ஆகியோர் இலங்கை ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன்,  சதுரிக்கா மதுஷானி மற்றும் தீபிகா பண்டார ஆகியோர் இலங்கை பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இலங்கையின் இரண்டு அணிகளும் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றிருந்ததுடன், இறுதிப்போட்டிகளில் இலங்கை ஆண்கள் அணி, மாலைத்தீவுகளையும், இலங்கை பெண்கள் அணி சிங்கபூர் அணியையும் வீழ்த்தியிருந்தனர்.

இலங்கை ஆண்கள் அணி வீரர்கள் மாலைத்தீவுகளின் இஸ்மைல் சஜிட் மற்றும் அடம் நஷீம் ஆகியோரை 2-0 (21-13, 21-13) என வீழ்த்தினர். பெண்கள் அணியை பொருத்தவரை சிங்கபூரின் எலிசா சோங் மற்றும் ஒன்ங் வீ யூ ஆகியோரை 2-0 (21-18, 22-20) என வீழ்த்தினர்.

இதன்மூலம் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றுள்ளனர். இந்த விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 28 முதல்  ஆகஸ்ட் 8ம் திகதிவரை இங்கிலாந்தின் பேர்மிங்கமில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் போட்டி முடிவுகள்

இலங்கை ஆண்கள் அணி

  • 2-0 (21: 16, 21:15) எதிர் மலேசியா
  • 2-0 (21:18, 21:15) எதிர் மாலைத்தீவுகள்
  • 2-0 (21:10, 21:16) எதிர் சிங்கபூர்
  • இறுதிப்போட்டி | 2-0 (21:13, 21:13) எதிர் மாலைத்தீவுகள்

இலங்கை பெண்கள் அணி

  • 2-1 (15:21, 22:20, 15:10) எதிர் மலேசியா
  • 2-1 (14:21, 21:18, 15:12) எதிர் சிங்கபூர்
  • இறுதிப்போட்டி | 2-0 (21:18, 22:20) எதிர் சிங்கபூர்

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<