முதல் நாளில் ஹெம்ஷையர் அணிக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

Sri Lanka Emerging team tour of England 2022

249

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மற்றும் ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (13) நிறைவுக்குவந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இலங்கை அணியானது கெண்ட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிகச்சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தது.

IPL தொடரின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹஸரங்கவுக்கு முதலிடம்

அந்தவகையில் ஹெம்ஷையர் அணிக்கு எதிரான இந்தப்போட்டியிலும் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை அடையும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சராசரியான பிரகாசிப்பினை வெளிப்படுத்தியிருந்தது.

முதல் போட்டியில் இரட்டைச்சதமடித்த நிஷான் மதுசங்க, சதம் கடந்த லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும் முதல் போட்டியில் 99 ஓட்டங்களை பெற்றிருந்த நுவனிந்து பெர்னாண்டோ அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக சந்துஷ் குணதிலக்க அரைச்சதம் கடந்தும், துனித் வெல்லாலகே மத்தியவரிசையிலும், டிலும் சுதீர பின்வரிசையிலும் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சந்துஷ் குணதிலக்க 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நுவனிந்து பெர்னாண்டோ  52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுடன் துனித் வெல்லாலகே 44 ஓட்டங்களையும், டிலும் சுதீர 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஹெம்ஷையர் சார்பாக ஜோன் டேனர் 5 விக்கெட்டுகளையும், ஹெரி பெட்ரி 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஹெம்ஷையர் அணி, வெறும் 4 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டிருந்ததுடன், ஓட்டங்களின்றி முதலாவது விக்கெட்டினை இழந்துள்ளது. முதலாவது விக்கெட்டினை டிலும் சுதீர வீழ்த்த ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

  • இலங்கை அணி – 281/10 (86.1), சந்துஷ் குணதிலக்க 53, நுவனிந்து பெர்னாண்டோ 52, துனித் வெல்லாலகே 44, டிலும் சுதீர 33, ஜோன் டேனர் 31/5, ஹெரி பெட்ரி டேனர் 48/3
  • ஹெம்ஷையர் அணி – 0/1 (0.4), டிலும் சுதீர 0/1

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<